உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 300 விநாயகர் சிலைகள் கரைப்பு

300 விநாயகர் சிலைகள் கரைப்பு

பொங்கலுார், ; பொங்கலுார் ஒன்றிய பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பி.ஏ.பி., வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்பட்டன. கடந்த, 27ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொங்கலுார் ஒன்றிய பகுதிகளில், ஹிந்து முன்னணி சார்பில், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கடந்த இரண்டு நாளாக பொதுமக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மாலை விநாயகர் சிலைகள் கொடுவாய்க்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. ஊர்வலத்துக்கு முன், அம்மன் அலங்காரத்தில் பக்தர்கள் சென்றனர். அதனை தொடர்ந்து, முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்றது. தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பொதுமக்கள் ஊர்வல வாகனங்களில் கொடுத்து அனுப்பினர். விநாயகர் ஊர்வலத்தின் போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர். அதன்பின் கொடுவாய் பஸ்ஸ்டாப் அருகே பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி நடந்தது. நிறைவாக, பி.ஏ.பி., வாய்க்காலில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், கோவை கோட்ட செயலாளர் கிருஷ்ணன், கொடுவாய் ஒன்றிய தலைவர் குமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். இதேபோல், திருப்பூர் மாநகரம் மற்றும் தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி என, ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா, பாரத் சேனா, ஹிந்து முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 12 இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. மொத்தம், 300 சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !