முறைகேடாக அமைக்கப்பட்ட 37 குடிநீர் இணைப்பு துண்டிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 2வது மற்றும் 4வது குடிநீர் திட்டங்களின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதியில் பல்லாயிரக்கணக்கான குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில், மாநகராட்சி பகுதியில் பலர் முறைகேடாக குடிநீர் இணைப்புகளை பெற்றுள்ளதாகவும், இதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் அமித் உத்தரவின்பேரில், மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீடுகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முறைகேடான குடிநீர் இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, நான்கு வணிக பயன்பாட்டு இணைப்புகள் உட்பட மொத்தம் 37 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முதல் மண்டலத்தில் 5 இணைப்புகள், இரண்டாவது மண்டலத்தில் 3, மூன்றாவது மண்டலத்தில் 17, நான்காவது மண்டலத்தில் 12 என மொத்தம் 37 முறைகேடான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். முறைகேடாக குடிநீர் இணைப்பு பெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.