முதல்வர் கோப்பையில் மாவட்டத்துக்கு 5 தங்கம்: பதக்கம் சூடியவர்களின் வெற்றி ரகசியம்
முதல்வர் கோப்பையில் மாவட்டத்துக்கு 5 தங்கம் சென்னையில் நடந்த மாநில முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்று, திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனையர், அரசு ஊழியர், பள்ளி, கல்லுாரி பிரிவில், ஐந்து தங்கம், ஆறு வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம், 18 பதக்கங்களை கைப்பற்றினர்; மாநில அளவில் திருப்பூர், 18வது இடம் பெற்றுள்ளது. இதில், தங்கப்பதக்கம் வென்றவர்களுடன் நேர்காணல் கண்டோம். அவர்கள் பகிர்ந்தவை, வாசகர்களுக்காக: பேட்மின்டனில் சாதித்த இளம்படை திருப்பூர் மாவட்டத்தின் தங்க வேட்டை அதிகரிக்க பேட்மின்டன் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பேட்மின்டனில் 17 வயதினர் பிரிவு மாணவர் இரட்டையர் பிரிவில் பிரன்ட்லைன் பள்ளி மாணவர்கள் கிருத்திக் - ரிபினேஷ்; 17 வயதினர் பிரிவு மாணவியர் இரட்டையர் பிரிவில் இதே பள்ளியை சேர்ந்த மாணவியர் கிருத்தியா - சமீரா தங்கம் வென்றனர். கிருத்திக்: கடந்தாண்டு கோப்பை பெற முடியவில்லை என்பதால், இந்தாண்டு துவக்கம் முதலே கோப்பை கைப்பற்ற முனைப்பு காட்டினோம். ஒன்பது ஆண்டுகளாக பேட்மின்டன் வீரராக உள்ளேன். தேசிய போட்டிகளில் விளையாடிய அனுபவம் எங்களுக்கு பெரிதும் கைகொடுத்தது. மதுரை அணியுடன் இறுதி போட்டி சவாலாக இருந்தது. ரிபினேஷ்: பத்து ஆண்டுகளாக பள்ளியின் சிறந்த பேட்மின்டன் வீரராக உள்ளேன். கடந்த ஆண்டு விருதுநகருடன் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற முடியாமல் திருப்பூர் திரும்பினோம். நடப்பாண்டு மாநில முதல்வர் கோப்பை இறுதி போட்டியில், 21 - 16, 21 - 19 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணியை வென்று, முதலிடம் பிடித்தோம். என் அப்பாவின் பாணியைப் பார்த்து கற்றுக்கொண்டேன். எல்.கே.ஜி.யில் இருந்து பேட்மின்டன் விளையாடுகிறேன். மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமி வாயிலாக, மாநில, தேசிய போட்டியில் பங்கேற்றுள்ளேன். கிருத்தியா: என் தந்தை, சித்தப்பா பேட்மின்டன் பயிற்சியாளர்கள். பள்ளி படிப்பு துவக்கம் முதலே பேட்மின்டனில் ஆர்வம் அதிகம். கடந்தாண்டு மாநில முதல்வர் கோப்பை அரையிறுதி வரை சென்று தோல்வி அடைந்ததால், இந்தாண்டு போட்டி அறிவிக்கப்பட்டது முதல் தொடர் பயிற்சி செய்து வந்தேன். வெற்றிக்கு பயிற்சி மிகவும் முக்கியம். இறுதி போட்டியில் சிவகங்கை அணியை, 21 - 12, 21 - 14 என்ற புள்ளிக் கணக்கில் வென்றோம். எட்டு ஆண்டுகளாக, விளையாடி வருகிறேன். 23 மாநில போட்டியில், 13 தேசிய போட்டியில் பங்கேற்று, சான்றிதழ் பெற்றுள்ளேன். வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கம், வெகுமதி வழங்குவது மகிழ்ச்சியாகவும், அடுத்த நிலைக்கு செல்வதற்கு உதவியாகவும் உள்ளது. சமீரா: ஆறு ஆண்டுகளாக பேட்மின்டன் விளையாடி வருகிறேன். முதல் முறையாக மாநில முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் வெற்றி பெற்றது என் குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சி. என் தந்தை பேட்மின்டன் விளையாடுவார். அதைப் பார்த்து தான் எனக்கு ஆர்வம் வந்தது. கேரம் சாதனை கைகூடியது அரசு ஊழியர் பிரிவில், கேரம் போட்டியில் தாராபுரம், ஜின்னா மைதானத்தைச் சேர்ந்த சிக்கந்தர் தங்கம் வென்றார். அவர் பகிர்ந்தவை: தாராபுரம் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் பணிபுரிகிறேன். பழநி - சேலம் பஸ்சில் நடத்துனராக பணியாற்றி வருகிறேன். என் அப்பா தான் எனக்கு முன்மாதிரி; அவர் தான் கேரம் கற்றுக்கொடுத்தார். பள்ளி படிப்பில் இருந்தே கேரத்தில் ஆர்வம் அதிகம். 21 ஆண்டுகளாக கேரம் விளையாடுகிறேன். கடந்தாண்டு முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்று, இரட்டையரில் மூன்றாமிடம் பெற்றேன். நடப்பாண்டு முதலிடம் பெற பயிற்சி எடுத்தேன். பணி ஒரு பக்கம் என்றாலும், விடுமுறை நாளில் தொடர்ந்து கேரம் விளையாடி கொண்டே இருப்பேன். தொடர்ந்து விளையாடியதால் தான், 30 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் வந்த போதும் முதலிடம் பெற முடிந்தது. துாத்துக்குடி வீரரை வெற்றி பெற்று, பரிசுத்தொகை கிட்டியது. பளு துாக்கி வலுசேர்த்த மாணவர் கல்லுாரி பிரிவு பளு துாக்குதலில் காங்கயம், கருப்பண்ணன் மாரியப்பன் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கும் அன்புசஞ்சய், 22 தங்கப்பதக்கம் வென்றார். அன்பு சஞ்சய் சொல்கிறார்: என் அப்பா விஜயகுமார், பளு துாக்கும் வீரர். அவரை பார்த்து கற்றுக்கொண்டு, பயிற்சி எடுத்தேன். இதற்கு முன் நடந்த மாநில முதல்வர் கோப்பை போட்டியில், முதல் மூன்று இடங்களுக்குள் பெற முடியவில்லை. இம்முறை கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என களமிறங்கினேன். இதுவரை ஆறு தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கைகொடுத்தது. மாநில போட்டிக்கு மூன்று ஆண்டுகளாக கடும் பயிற்சி எடுத்தேன்; முதலிடம் பெற முடிந்தது. ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கிடைத்தது . இது, அடுத்த நிலைக்கு செல்ல உத்வேகமாக உள்ளது. குண்டு எறிதலில் பிரகாசித்த மாணவி காங்கயத்தில் உள்ள ஜி.எஸ். உடற்கல்வி கல்லுாரியில் படிக்கும் வைஷ்ணவி, கல்லுாரி பிரிவு நான்கு கிலோ குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். அவர் கூறியதாவது: வாலிபாலில் தான் ஆர்வமாக இருந்தேன். ஆனால், உடற்கல்வி ஆசிரியர்கள், குண்டு எறிதலுக்கு தேர்வு செய்து பயிற்சி அளித்தனர். 20 வயது முதலே தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். நான்கு ஆண்டு கடினமான பயிற்சிக்கு கிடைத்த வெற்றி, தங்க பதக்கம். மொத்தம் ஆறு முறை குண்டு எறிதல் வாய்ப்பு கொடுப்பர். முதல், இரு 'த்ரோ'க்களில் நம் இலக்கை எட்டி விட்டால், அடுத்தடுத்து வருபவர்களால் எட்டிப்பிடிக்க முடியாது. தங்களுக்கு எந்த போட்டியில் சாதிக்க முடியும் என்ற தோன்றுகிறதோ அந்த போட்டியில் இறங்கினால், பெண்களால் சாதிக்க முடியும். கா ங்கயத்தில் உள்ள ஜி.எஸ். உடற்கல்வி கல்லுாரியில் படிக்கும் வைஷ்ணவி, கல்லுாரி பிரிவு நான்கு கிலோ குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றார். அவர் கூறியதாவது: வாலிபாலில் தான் ஆர்வமாக இருந்தேன். ஆனால், உடற்கல்வி ஆசிரியர்கள், குண்டு எறிதலுக்கு தேர்வு செய்து பயிற்சி அளித்தனர். 20 வயது முதலே தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். நான்கு ஆண்டு கடினமான பயிற்சிக்கு கிடைத்த வெற்றி, தங்க பதக்கம். மொத்தம் ஆறு முறை குண்டு எறிதல் வாய்ப்பு கொடுப்பர். முதல், இரு 'த்ரோ'க்களில் நம் இலக்கை எட்டி விட்டால், அடுத்தடுத்து வருபவர்களால் எட்டிப்பிடிக்க முடியாது. தங்களுக்கு எந்த போட்டியில் சாதிக்க முடியும் என்ற தோன்றுகிறதோ அந்த போட்டியில் இறங்கினால், பெண்களால் சாதிக்க முடியும்.