தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி
பெருமாநல்லுார் : பெருமாநல்லுார் ஊராட்சி, ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் நவநீதன், 48; விவசாயி. தோட்டத்து வீட்டில் 10 ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை தோட்டத்திற்குள் புகுந்த 6 நாய்கள் கொண்ட கூட்டம் ஒன்று அங்கு கட்டி போட்டு இருந்த மூன்று செம்மறி ஆடு மற்றும் இரண்டு வெள்ளாடு என ஐந்து ஆடுகளை கடித்து குதறி உள்ளது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு நவநீதன் வந்துள்ளார். அவரை பார்த்ததும் நாய்கள் அங்கிருந்து ஓடி விட்டன. நாய்கள் கடித்ததில் ஐந்து ஆடுகள் இறந்து போயின. தகவலறிந்து வருவாய் துறையினர், போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். மக்கள் கூறுகையில், 'வலசுபாளையம், கோமங்காடு, பொருசுபாளையம், ராமா கார்டன், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதியில் அதிக அளவில் கால்நடைகளை வாழ்வாதாரமாக கொண்டு பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தெரு நாய்கள் கூட்டமாக வந்து ஆடு மற்றும் கோழிகளை கடித்து கொல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த கோரி ஊராட்சி நிர்வாகத்தில் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை,' என்றனர்.