உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலவச ஸ்கூட்டர் வழங்க மாற்றுத்திறனாளி 52 பேர் தேர்வு

இலவச ஸ்கூட்டர் வழங்க மாற்றுத்திறனாளி 52 பேர் தேர்வு

திருப்பூர்; இணைப்பு சக்கரம் பொருத்திய இலவச ஸ்கூட்டருக்கான நேர்காணலில் நேற்று, மாற்றுத்திறனாளிகள் 52 பேர், தேர்வு செய்யப்பட்டனர். கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசு சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்றுவரும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்று, ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச ஸ்கூட்டருக்கான நேர்காணல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா மற்றும் குழுவினர், நேர்காணல் நடத்தினர். மருத்துவச்சான்றுகள் சரிபார்க்கப்பட்டும், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரில் மாற்றுத்திறனாளிகளால் சுயமாக சென்று அமர முடிகிறதா என பரிசோதிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டனர். மொத்தம், 275 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தநிலையில், நேற்றைய நேர்காணலில் 141 பேர் பங்கேற்றனர்; இவர்களில், 52 பேர், ஸ்கூட்டர் பெற பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். விண்ணப்பித்து காத்திருக்கும் மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, அடுத்தடுத்து முகாம் நடத்தப்படும் என, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !