உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் பின்னலாடை துறையில் 6 லட்சம் பெண் தொழிலாளர்கள்

திருப்பூர் பின்னலாடை துறையில் 6 லட்சம் பெண் தொழிலாளர்கள்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச் செயலாளர் குமார் துரைசாமி: திருப்பூர் பின்னலாடை துறையில், மொத்தம் பத்து லட்சம் தொழிலாளரில், 60 சதவீதம், அதாவது, ஆறு லட்சம் பெண் தொழிலாளர் பணிபுரிகின்றனர். சமீபத்தில் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐ.நா., வின் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஆடை உற்பத்தி நகரங்களில், குறிப்பாக, திருப்பூரில் ஆய்வு நடத்தியுள்ளனர். ஜார்கண்ட் மாநில பழங்குடியின பெண்கள் ஏராளமானோர், திருப்பூருக்கு வந்து, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளனர். தங்கள் திருமண செலவுக்கும் பணம் சேர்த்துவிட்டு, சொந்த ஊர் சென்றுவிட்டனர். திருமணத்துக்குப்பின், சொந்த ஊரிலேயே தங்கி விட்டனர். அப்பெண்களின் திறன் வீணானது. ஜார்கண்ட் அரசு, சலுகைகள் அறிவித்து, தங்கள் மாநிலத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்களை அழைத்தது. டில்லியை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் ஜார்கண்டில் ஆடை தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளன. அந்நிறுவனத்தில் பணிபுரிவோரில் 70 சதவீதம் பேர், திருப்பூரில் தொழில் கற்றுக்கொண்டு சென்ற பெண்கள் என, அந்த ஆய்வறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. மகன்களை உயர்த்தியபெண் தொழிலாளி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் பெண்களுக்காக பிரத்யேக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சில பெண்கள் தெரிவித்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கது. கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், தனது இரு மகன்களுடன், 17 ஆண்டுகளுக்கு முன் திருப்பூருக்கு வந்து, பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் தொழிலாளியாக சேர்ந்துள்ளார். தான் ஈட்டிய வருவாயில், இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார். தற்போது ஒரு மகன் பொறியியல் படிப்பு முடித்து மென் பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறோர்; மற்றொரு மகன் பொறியியல் படிப்பதாக அப்பெண் தெரிவித்தார். ஆடை உற்பத்தி துறையில், தையல், செக்கிங் போன்ற பிரிவுகளிலேயே பெண் தொழிலாளர் அதிகம் பணிபுரிகின்றனர். அனுபவமும், திறமையும் மிக்க பெண்களுக்கு பயிற்சி அளித்து, சூப்பர் வைசர், உற்பத்தி மேலாளர், தர கட்டுப்பாட்டாளர் போன்ற இடங்களில் பணி அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. திருப்பூர் தொழில் பங்களிப்போர் சங்கம் மூலம், இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பெண்கள் கூடுதல் சம்பளம் பெறுவர்; குடும்பத்திலும், சமூகத்திலும் அவர்களின் அந்தஸ்து மேலும் உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !