உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நுாற்பாலை தொழில்நுட்ப மேம்பாடு 6 சதவீத வட்டி மானிய கடன் திட்டம்

நுாற்பாலை தொழில்நுட்ப மேம்பாடு 6 சதவீத வட்டி மானிய கடன் திட்டம்

திருப்பூர் : நுாற்பாலைகளில், புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவ ஏதுவாக, 6 சதவீத வட்டி மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவலுக்கு பின், நுாற்பாலை தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. மின் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால், நுாற்பு தொழில் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறது. நுாற்பாலைகளில் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த, இளம் தொழில்முனைவோர் முயற்சித்து வருகின்றனர்.தமிழக அரசின் கைத்தறித்துறை சார்பில், நுாற்பாலைகளில் புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் நுாற்பாலைகளில், பழைய இயந்திரங்களை மாற்றிவிட்டு, புதுவகை இயந்திரங்களை பொருத்த, 6 சதவீத வட்டி மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.வட்டி மானிய திட்டம், நடப்பு நிதியாண்டில் துவங்கி, 2033ம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும். புதிய தொழில்நுட்ப மேம்பாட்டு கடன், 10 சதவீத வட்டியில் பெறும் போது, 6 சதவீத வட்டியை அரசே செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பின்னிங் மில், ஓ.இ., (ஓபன் எண்ட்) மில், 'ஏர் ஜெட் ஸ்பின்னிங் மில்களில், 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்திய இயந்திரங்கள் மற்றும் பிரதான உதிரி பாகங்களை இத்திட்டத்தில் புதுப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், நுாற்பாலைகள் புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவது எளிதாக மாறியுள்ளதாக, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சங்க தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''வட்டி மானிய திட்டத்தில், 14 வகையான நுாற்பாலை பிரிவுகள் பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2033ம் ஆண்டு வரை இத்திட்டம் நடைமுறையில் இருக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த, கைத்தறித்துறை இயக்குனர் தலைமையிலான தொழில்நுட்ப கமிட்டியும், தலைமை செயலாளர் தலைமையில் ஒப்புதல் அளிக்கும் கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளாது. இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களை, சங்க உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி