8 தெரு நாய்கள் பலி; விஷம் வைத்து கொலை?
பல்லடம்; பல்லடம், எஸ்.கே.ஆர்., நகர், காமராஜர் நகர், மகாலட்சுமிபுரம், அக்ரஹார வீதி, கருப்பராயன் கோவில் வீதி ஆகிய இடங்களில்,நேற்று முன்தினம் மாலை, 5; நேற்று அதிகாலை, 3 என, மொத்தம், 8 தெரு நாய்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தன. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள் இறந்த நாய்களின் சடலங்களை, நகராட்சி மயானத்தில் புதைத்தனர். ஒரே நாளில், 8 தெரு நாய்கள் இறந்து கிடந்த சம்பவம், பல்லடம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாயில் நுரை தள்ளிய நிலையில் நாய்கள் இறந்துள்ளதால், விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். புகார் கொடுப்போம் விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகையில், 'தெரு நாய்களால் தொல்லை இருப்பதாக புகார் அளித்தால், அதற்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்த வேண்டியது நகராட்சியின் கடமை. நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விடுவதால், சிலர் இது போன்ற அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். உயிரிழந்த எட்டு நாய்களும் நிச்சயமாக விஷம் வைத்தே கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. பல்லடத்தில் உடனடியாக நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க வேண்டும். இது குறித்து விசாரிக்க வலியுறுத்தி, நகராட்சி, போலீஸ் மற்றும் கால்நடை துறையில் புகார் மனு கொடுக்கப்படும், என்றனர்.