இறந்தும் வாழும் உடல் கவுரவித்து வாழ்த்து மடல்
''இருக்கும் வரை மட்டுமல்ல... இறந்த பிறகும் மத்தவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நாம உபயோகமா இருக்கணும். இப்படித்தான் நினைச்சாரு என் வீட்டுக்காரரு. நான் இறந்துட்டா, என் உடம்பை தானம் பண்ணிடுங்கன்னும் சொன்னாரு. அதே மாதிரி பண்ணிட்டோம். இதுல, எங்களுக்கு எந்த தயக்கமும் இல்ல. மண்ணுல மக்கி, நெருப்பு பொசுங்கி போற உடம்பு தானே... அது அரசு மருத்துவக்கல்லுாரியில் படிக்கிற பசங்களோட கல்விக்கு பயன்படறது, நல்ல விஷயம் தானே... மறைந்தும் என் கணவரை பெருமைப்படுத்தற மாதிரி உணர்கிறேன்...'' தன் கணவரை இறந்த துக்கம் மறையாத போதும், உடல் தானம் குறித்த தெளிவை பெற்றிருந்தார், திருப்பூர் - வஞ்சிபாளையத்தை சேர்ந்த யசோதா. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையில் இருந்த, அவரது கணவர் சண்முகம், 73 சில நாட்களுக்கு முன் இறந்தார். அவரது விருப்பப்படியே அவரது உடலை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர் அவரது குடும்பத்தினர். உடல் தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு நன்றி சொல்லி பாராட்டும் நிகழ்ச்சி, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்தது; குடும்பத்தினர் சான்றிதழ் வழங்கி கவுர விக்கப்பட்டனர், சண்முகத்தின் மகன் கோபிநாத் கூறியதாவது:
மருத்துவக்கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தானமாக பெறப்படும் உடலில் இருந்து தான் உடற்கூறு தொடர்பான கல்வி கற்பிக்கப்படுகிறது; இதுபோன்ற செய்முறை பயிற்சியின் விளைவாக தான், சிறந்த மருத்துவர்கள் உருவாகிறார்கள் என்றனர் டாக்டர்கள். மனித உடல் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு இறந்தவர்களின் உடல் பயன்படுத்தப்படுவதன் வாயிலாக, இறந்தும் அவர்கள் வாழ்கின்றனர் என்றும் சொல்லலாம். அதன்படி, என் தந்தையின் விருப்பப்படி, அவரது உடலை தானம் செய்தோம். அவர் இறந்தவுடன், அவரது கண்களையும் தானம் செய்தோம். இவ்வாறு, அவர் கூறினர்.