உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பூ மார்க்கெட்டில் பொலிவிழந்த விநாயகர் கோவில்

பூ மார்க்கெட்டில் பொலிவிழந்த விநாயகர் கோவில்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சியின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ஈஸ்வரன் கோவில் வீதியில் இயங்கி வந்த பூ மார்க்கெட் புதிய பொலிவுடன் அமைக்கப்பட்டது; கடந்த ஓராண்டாக, புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.அப்பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, ஸ்ரீவலம்புரி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலின் உபகோவிலாக இருக்கும் இக்கோவிலை, பரம்பரை அறங்காவலர்கள் பராமரித்து வருகின்றனர். கோவிலுக்கு சொந்தமான ஏழு கடைகள், பூ வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.பூ மார்க்கெட் பணி நடந்த போது, கீழ்தளத்தில் பார்க்கிங் அமைக்க குழி தோண்டிய போது, கோவிலின் வடபுற மதில்சுவர் இடிந்து விழுந்தது. உள்ளே இருந்த சில சன்னதிகளும் சேதமாகின.இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணி நடந்து வந்தது; கடந்த ஓராண்டுக்கு மேலாக, பூ மார்க்கெட் செயல்பட துவங்கி விட்டது. இருப்பினும், சேதமான கோவில் பகுதிகள் மீண்டும் சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. கோவில் பொலிவிழந்து காணப்படுவதால், பக்தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.எனவே, கோவிலை புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்த, மாநகராட்சி நிர்வாகமும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சி பூ மார்க்கெட் பணியின் போது, கோவிலின் வடபுறம் மதில் மற்றும் சில சன்னதிகள் சேதமாகின; பணி நிறைவு பெற்றதும், சீரமைத்து கொடுப்பதாக, ஒப்பந்ததாரர் தரப்பு கூறியிருந்தது. தொடர்ந்து பேசி வருகிறோம்.ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழா முடிந்து, பாலாலயம் நடத்தி, திருப்பணி துவங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ