உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட கலைத்திருவிழாவில் கலக்கிய மாணவியர் படை!

மாவட்ட கலைத்திருவிழாவில் கலக்கிய மாணவியர் படை!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலைத்திருவிழாவில், 1,179 பேர் பங்கேற்று அசத்தினர். இன்றுடன் மூன்று நாள் கலைத்திருவிழா கொண்டாட்டம் நிறைவு பெறுகிறது. இம்மாத இறுதியில் நடக்கவுள்ள மாநில கலைத்திருவிழாவுக்கு, மாணவ, மாணவியர், பள்ளி அணிகளை தேர்வு செய்ய, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், மாவட்ட கலைத்திருவிழா, கடந்த, 5 ம் தேதி ஜெய்வாபாய் மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளிகளில் துவங்கியது. நேற்று, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஜெய்வாபாய் பள்ளியிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ, மாணவியருக்கு நஞ்சப்பா பள்ளியி லும் கலைத்திருவிழா நடந்தது. தனிநபர், குழு நடனம், நடிப்பு, வில்லுப்பாட்டு,பரதநாட்டியம், 'பசுமையும் பாரம்பரியமும்' தலைப்பில் நாட்டுப்புற நடனம், பொம்மலாட்டம், 'மைம்', முகத்தில் விழிப்புணர்வு ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. கலைத்திருவிழாவில் மாணவி ஒருவரின் முகத்தில் ஓவியம் தீட்டும் நிகழ்வில்,' பசுமை விழிப்புணர்வு' எனும் தலைப்பில், வனம், நீர், காற்று, பூமி அது சார்ந்த நிலங்கள் நிலப்பரப்பு ஒரு புறம் மலையால், ஒரு புறம் கடலால் சூழப்பட்டுள்ளது, மரம் வளர்ப்பு ஆகியவற்றை விவரிக்கும் வகையில், முகத்தில் இயற்கை தெரியும் வகையில் வரையப்பட்டிருந்தது. மாணவகள் ஏமாற்றம் கலைத்திருவிழா நடக்கும் நாளில் அடிக்கடி மின்தடை செய்யப்பட்டதால், பல்சுவை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பெற்றோர்கள் கூறுகையில், 'ஒரு மாதம் முன்பே மாவட்ட கலைத்திருவிழா இடம், நாள் முடிவு செய்யப்பட்டு விட்டது. மின்தடை அறிவிப்பும் ஓரிரு நாள் முன்பே தெரிவிக்கப்படுகிறது. கல்வித்துறை - மின்வாரிய அதிகாரிகள் கலந்து ஆலோசித்து மின்தடையை தள்ளி வைத்திருக்கலாம்,' என்றனர். நஞ்சப்பா பள்ளி கலையரங்கில் யு.பி.எஸ். வசதி இருந்ததால், புளூடூத் உதவியுடன் பாடல்களை ஒலிபரப்பி, பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !