உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 100 இதயங்களை காக்கும் உன்னத முயற்சி! ரோட்டரி சங்கங்களின் உயிர்காக்கும் சேவை

100 இதயங்களை காக்கும் உன்னத முயற்சி! ரோட்டரி சங்கங்களின் உயிர்காக்கும் சேவை

திருப்பூர்; நுாறு இதயங்களின் மருத்துவ சிகிச்சையை மையப்படுத்தி, அதற்கான மருத்துவ செலவினங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில், வாக்கத்தான் மற்றும் மாரத்தான் நடத்தப்பட உள்ளது. திருப்பூரில் உள்ள ரோட்டரி சங்கங்கள், பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளில் தங்களின் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன. அவ்வகையில், காந்தி நகர் ரோட்டரி சங்கத்தின் முன்னெடுப்பாக, மண்டலம், 3203க்கு உட்பட்ட அனைத்து ரோட்டரி சங்கங்களையும் ஒருங்கிணைத்து, '100 இதயங்களுக்கான ஒரு புனித நடை' என்ற ஒரு நிகழ்வை நடத்த இருக்கின்றன. வரும், செப்., 21ம் தேதி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் நடக்க உள்ள இந்நிகழ்ச்சியின், அறிமுகம் நேற்று, காந்திநகர் ரோட்டரி கிளப் அரங்கில் நடந்தது. காந்தி நகர் ரோட்டரி தலைவர் மணிமாறன், வரவேற்றார். தலைமை விருந்தினராக அப்புக்குட்டி, சிறப்பு விருந்தினராக ஏற்றுமதியாளர் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் பங்கேற்றனர். மாவட்ட கவர்னர் தனசேகர், முன்னிலை வகித்தார். திட்ட தலைவர் அப்துல் கரீம், காந்திநகர் ரோட்டரி பொருளாளர் ரமேஷ் குமார், மாவட்ட பயிற்றுனர் இளங்குமரன், மாவட்ட வழிகாட்டி கார்த்திகேயன், மாவட்ட ஆலோசகர் சண்முகசுந்தரம், மாவட்ட பொது செயலாளர் சிவபிரகாஷ், சாய மற்றும் கெமிக்கல் அசோசியேஷன் தலைவர் நாகேஷ், டையிங் அசோசியேஷன் தலைவர் காந்திராஜன், 'வால்ரஸ்' நிறுவனர் டேவிட் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முடிவில், காந்தி நகர் ரோட்டரி செயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார். இதுதான் திட்டம்! காந்தி நகர் ரோட்டரி தலைவர் மணிமாறன் கூறியதாவது: ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையுடன் இணைந்து, இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள வசதி வாய்ப்பற்ற, ஏழ்மை நிலையில் உள்ள, 100 பேருக்கு, இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, 50 பேருக்கு ஸ்டென்ட், 50 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கு, ஏறத்தாழ, 3.50 கோடி ரூபாய் செலவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு, ரோட்டரி அமைப்பினர், தொழில்துறையினர், பள்ளி, கல்லுாரி நிர்வாகங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பினரிடம் இருந்தும் நிதி திரட்டும் நோக்கில், செப்., 21ம் தேதி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை