வீதியில் கழிவுநீர் குட்டை வாகனம் கவிழ்ந்தது
திருப்பூர்: திருப்பூரில், வீதியில் தேங்கி நின்ற கழிவுநீர் குட்டையில், வாகனம் கவிழ்ந்தது. திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டுக்கு உட்பட்டது திருமலை நகர். ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் 2 மற்றும் 3 ஆகிய வீதிகளில் உரிய கழிவு நீர் வடிகால் கட்டமைப்பு இல்லை. 'டிஸ்போஸபிள் பாயின்ட்' இல்லாத நிலையில், இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் ஓரிடத்தில் வந்து தேங்கி நிற்கிறது. பின், மாநகராட்சி கழிவுநீர் அகற்றும் வாகனம் மூலம் இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீர் அவ்வப்போது அகற்றப்படுகிறது. இவ்வழியாகச் சென்ற ஒரு சரக்கு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேங்கி நின்ற கழிவு நீருக்குள் பக்கவாட்டில் கவிழ்ந்தது. கிரேன் மூலம் அந்த வேன் அகற்றப்பட்டது. இதேபோல் அடிக்கடி வாகனங்கள் கவிழ்கின்றன. என்ன பிரச்னை? வார்டு கவுன்சிலர் நாகராஜ், மாநகராட்சி கமிஷனரைச் சந்தித்து நடவடிக்கை கோரி மனு அளித்தார். ''இந்த வீதிகளில் சேகரமாகும் கழிவு நீர் இங்குள்ள தொட்டியில் தேக்கி வைத்து வாகனம் மூலம் அகற்றப்படுகிறது. இந்த வாகனம் வரத் தாமதமாகும் போது, குட்டை போல் அதிகளவில் தேங்கி விடுகிறது. அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் இதில் விழுந்து விபத்து ஏற்படுகிறது. இங்கு நிரந்தர தீர்வாக, மோட்டார் மூலம் கழிவு நீர் அகற்றும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.