உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சமையலறைக்குள் ஒரு சைலன்ட் கில்லர்

 சமையலறைக்குள் ஒரு சைலன்ட் கில்லர்

'க ருப்பு பூஞ்சையுடன் காணப்படும் பெரிய வெங்காயத்தை பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவு, உடலுக்கு பல்வேறு நோய் பாதிப்பை ஏற்படுத்தும்' என்கின்றனர் விஞ்ஞானிகள். இது குறித்து, கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி அசோக்குமார் வீரமுத்து கூறியதாவது: பெரிய வெங்காயம் தோட்டங்களில் இருந்து அறுவடை செய்து, எடுத்து வந்து, கிடங்குகளில் வைக்கும் வரை பிரச்னை எதுவுமில்லை. குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த வெங்காயத்தை விற்பனை செய்து விட வேண்டும். ஆனால், வியாபாரிகள் சிலர், மாதக்கணக்கில் வெங்காயத்தை குடோன்களில் இருப்பு வைப்பர். அந்த அறையில் போதிய காற்றோட்டம் இல்லாதது, ஈரப்பதம் மேலும், பாலிதீன் பைகளில் வெங்காயத்தை அடைத்து வைப்பது போன்ற காரணங்களால், அந்த வெங்காயத்தின் மீது கருப்பு நிறத்தில் பூஞ்சை உருவாகிறது; இது, 'ஆஸ்பெர்கிலஸ் நைஜர்' எனப்படுகிறது. இந்த பூஞ்சை, முதலில் வெங்காயத்தின் மேல் பரப்பில் தோன்றி, ஆழமாக பரவி, முடிவில் முழு வெங்காயத்தையும் கருப்பு நிறமாக மாற்றி, அழுக செய்து விடும். இந்த கருப்பு பூஞ்சை, மனித உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பூஞ்சை, வெங்காயத்தை உண்பதாலும், அதை சுவாசிப்பதாலும் உடலுக்குள் நுழைகிறது. இந்த பூஞ்சை, 'ஒக்ராடாக்சின்' மற்றும் 'பியூமோனிசின்' எனப்படும் சக்தி வாய்ந்த பூஞ்சை நச்சை உற்பத்தி செய்கிறது. இந்த நச்சு, வெங்காயத்தில் இருந்து நேரடியாக உணவு பண்டங்களுக்குள் செல்கிறது; அவற்றை நாம் உண்ணும் போது, உடலுக்குள் செல்கிறது. இந்த பூஞ்சை, சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை, கடுமையாக பாதிக்கச் செய்கிறது; புற்றுநோய் ஏற்படவும் இது காரணமாகிறது. மேலும், இந்த பூஞ்சை தாக்கப்பட்ட வெங்காய குவியல் உள்ள அறைகளில் நாம் இருக்கும் போது, அந்த பூஞ்சையின் வாசத்தை நாம் சுவாசிப்பதன் வாயிலாக, நுரையீறலும் பாதிக்கும். நாள்பட்ட இருமல், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீறல் தொற்றுகளை இது ஏற்படுத்தும்; இது, ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் நோய் எதிர்பாற்றல் உள்ளவர்களுக்கு பேராபத்தாக மாறும். தவிர்ப்பது எப்படி? இந்த பேராபத்தை தடுக்க எளிமையான சில வழிகள் உண்டு. வெங்காயத்தில் கருப்பு பூஞ்சை சிறிதளவு தெரிந்தால், அதை வெட்டி எறிந்து, எஞ்சிய பகுதியை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். பூஞ்சை நச்சு, கண்ணுக்கு தெரியாமல், முழு வெங்காயத்திலும் பரவியிருக்கும் என்பதால், அந்த வெங்காயத்தை முழுவதுமாக அப்புறப்படுத்துவதே நல்லது. வெங்காயத்தை மென்மையாக கையாள வேண்டும். குளிர்ச்சி நிறைந்த, வறண்ட மற்றும் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் சேமிக்க வேண்டும். ஈரப்பதம் தங்கி நிற்கும் பாலிதீன் பைகளில் அடைத்து வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ