பள்ளிகளில் கல்வித்துறை அலுவலர் குழுவினர் ஆய்வு
உடுமலை, ; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பார்வையிட தேர்வு செய்யப்பட்டுள்ள, உடுமலை சுற்றுப்பகுதி அரசு பள்ளிகளில், கல்வித்துறை அலுவலர்கள் குழுவின் முதற்கட்ட ஆய்வுக்கு தயார்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநில அளவில், ஒரு வட்டாரத்துக்கு, 12 அரசு பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பார்வையிட பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளிலும், அமைச்சரின் பார்வைக்கு பள்ளிகள் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.அப்பள்ளிகளில், நுாறு சதவீதம் அனைத்து மாணவர்களும் வாசித்தல் திறன் பெற்றிருக்க வேண்டுமெனவும், அந்த வகையில் தயாராக இருப்பதற்கும், ஏற்கனவே கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.பிப்., மாதம் அமைச்சர் ஆய்வு நடத்துவதற்கு, பள்ளிகள் தயார்படுத்த முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டது. பின், தற்போது வரை ஆய்வு நடத்தப்படவில்லை. இதனால் பள்ளிகளில் ஆண்டு விழா பணிகள் துவக்கப்பட்டது.தற்போது மீண்டும் அந்தந்த பகுதிகளில் உள்ள, கல்வித்துறை அலுவலர்கள் குழுவினர் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடத்தும் வகையில், தலைமையாசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், வாசித்தல் பயிற்சியில் மாணவர்களை தயார்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.