உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னை மரங்களை சாய்க்கும் வாடல்! விஞ்ஞானிகள் குழு ஆய்வு

தென்னை மரங்களை சாய்க்கும் வாடல்! விஞ்ஞானிகள் குழு ஆய்வு

உடுமலை; குடிமங்கலம் வட்டாரத்தில், கேரள வேர் வாடல் நோய் பாதித்த தென்னந்தோப்புகளில், தோட்டக்கலைத்துறை, வேளாண் பல்கலை., விஞ்ஞானிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நோய்த்தடுப்பு பரிந்துரைகளை வழங்கினர்.குடிமங்கலம் வட்டாரத்தில், 14,850 ெஹக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இப்பகுதியில் தென்னை மரங்களில், பரவி வரும் நோய்த்தாக்குதலால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.தற்போது, மூங்கில்தொழுவு, கொசவம்பாளையம், வீதம்பட்டி, வாகத்தொழுவு பகுதியில் வாடல் நோய் பரவி வருகிறது.அப்பகுதியில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சசிகலா தலைமையில் பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய, திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார், வேளாண் விஞ்ஞானிகள் கலையரசன், ராதாஜெயலட்சுமி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்து நோய்த்தடுப்பு பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.

கேரளா வேர் வாடல் நோய்

நோய் தாக்கிய மரங்கள் ஆண்டுக்கு, 10 காய்களுக்கும் குறைவாக காய்க்கும். நோயுற்ற மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதால் மற்ற மரங்களுக்கு வேர் வாடல் நோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.

உரமேலாண்மை

தொழு உரம் 50 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ, 'பேசிலெஸ் சப்டிலிஸ்' 100 கிராம், யூரியா 1.3 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 2 கிலோ, பொட்டாஷ் 3.5 கிலோ, மெக்னீசியம் சல்பேட் 500 கிராம் ஆகியவற்றை ஆண்டுக்கு ஒரு முறை இட வேண்டும். வட்டப்பாத்தியில் பசுந்தாள் உரப்பயிர்களான தட்டைப்பயிர், சணப்பை, கலப்பகோணியம், பியூரேரியா மற்றும் தக்கைப்பூண்டு போன்றவற்றை பயிரிட்டு பூக்கும் முன்னரே மடக்கி உழுதுவிட வேண்டும்.தென்னையில் ஊடுபயிராக வாழை, மிளகு, கோகோ, மஞ்சள், இஞ்சி, கிழங்கு வகைகள், அன்னாசி, காபி, ஜாதிக்காய் மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களைப் பயிரிடலாம்.நோய்க் காரணியை பரப்பும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி மற்றும் கண்ணாடி இறக்கைப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் டைமீதோயேட் 1.5 மில்லி 1 மில்லி ஒட்டுத்திரவம் கலந்து ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளிக்கவும்.வேளாண் பல்கலை., யால், தயாரிக்கப்பட்ட 'கோகோகான்' எனும் நுண்ணுயிர்கள் கலவையை மரத்திற்கு 2 லிட்டர் என்ற அளவில் 8 லிட்டர் தண்ணீருடன் கலந்து வேர்வாடல் நோய்த் தாக்கப்பட்ட மரத்தின் வேர்பகுதியில் நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.நோயின் தீவிரம் பொறுத்து இரண்டு மூன்று மாத இடைவெளியில் தொடர்ந்து ஊற்ற வேண்டும். இந்த 'கோகோகான்' நுண்ணுயிரிக் கலவை கோவை வேளாண் பல்கலை., யின் பயிர் நோயியல்துறையில் கிடைக்கிறது.இவ்வாறு, நோய்த்தடுப்பு முறைகளை விவசாயிகளுக்கு பரிந்துரைத்தனர். ஆய்வின் போது, குடிமங்கலம் வட்டார, தோட்டக்கலை அலுவலர் காவியதீப்தினி, உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜசேகர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை