மேடு பள்ளமான ரோட்டினால் அதிகரித்து வரும் விபத்துகள்
உடுமலை : உடுமலை தளி ரோட்டில், நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ரோடு சறுக்கலாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.உடுமலை தளி ரோடு வழியாக கிராம ஊராட்சிகளுக்கும், மறையூர் மற்றும் மூணார் சுற்றுலா பகுதிகளுக்கும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தளி ரோடு மேம்பாலம் வரை, ரோட்டோரம் சரிவாக உள்ளது.தளி ரோடு விரிவுப்படுத்தும் போது, ஏற்கனவே உள்ள ரோட்டுக்கு சமமாக போடாமல் சிறிது பள்ளமாக போட்டிருப்பதால் சரிவாக உள்ளது. இதனால் வாகனங்கள் அவ்வழியாக செல்லும் போது தடுமாறி சறுக்கி விடுகின்றன.இதனால் ரோட்டோரத்தில் இடமிருந்தாலும், மற்ற கனரக வாகனங்கள் வரும்போது பலரும் ஒதுங்கி செல்வதற்கு அச்சப்படுகின்றனர். அதேபோல், அந்த பகுதியில் தளி ரோட்டிலிருந்து நகராட்சி அலுவலகம் செல்வதற்கான ரோட்டின் பிரிவும் உள்ளது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களும், மேடுபள்ளமான ரோட்டினால் விபத்துக்குள்ளாகின்றனர். இப்பிரச்னையை தவிர்க்கவும், அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்கும் டிவைடர் வைக்கப்பட்டுள்ளது.ஆனால், பொதுமக்கள் டிவைடர் வைக்கப்பட்டுள்ளதை தவறாக பயன்படுத்தும் வகையில் வாகனங்களை ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்திக்கொள்கின்றனர். இதனால் நகராட்சி அலுவலக ரோட்டிலிருந்து தளிரோட்டுக்கு வருவோருக்கும் சிக்கலாகிறது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, ரோட்டோரத்தை சமன்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.