பள்ளி ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை தேவை
உடுமலை; உடுமலை சின்னவீரம்பட்டி இந்திராநகர் பகுதியில், பள்ளிக்கு அருகில் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதைஅகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை ஒன்றியம் சின்னவீரம்பட்டி இந்திராநகர் பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 20க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.பள்ளி ரோட்டில் உள்ள குடியிருப்புகள், ரோட்டின் பாதி வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதனால், அப்பகுதியில் வாகனங்கள் செல்லும்போது, பள்ளி குழந்தைகள் ஒதுங்கி செல்வதற்கும் இடையூறாக உள்ளது. மேலும் குறுகலான ரோட்டினால், வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரும் சிரமப்படுகின்றனர்.குடியிருப்புகள் மட்டுமில்லாமல், ரோட்டின் பாதி வரை புதர்ச்செடிகளும் வளர்ந்துள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மழை நாட்களில் தண்ணீரும் தேங்குகிறது.பள்ளியை சுற்றியுள்ள பாதையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.ஒன்றிய அதிகாரிகள் இப்பிரச்னை குறித்து, விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.