மேலும் செய்திகள்
கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
28-Mar-2025
உடுமலை; உடுமலை - திருப்பூர் இடையிலான போக்குவரத்துக்கு, இரவில் கூடுதல் பஸ் வசதி செய்ய வேண்டுமென பயணியர் எதிர்பார்க்கின்றனர்.உடுமலை கிளை போக்குவரத்து கழகத்தின் சார்பில், கிராம மற்றும் தொலைதுார வழித்தடங்களில், நுாற்றுக்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.திருப்பூர் மற்றும் கோவை உட்பட தொழில் நகரங்களுக்கும் அன்றாடம் ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர்.இதில், கோவை செல்வதற்கு பழநி மற்றும் உடுமலையிலிருந்து நள்ளிரவு மற்றும் அதிகாலையிலும் பஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தேவையான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.உடுமலையிருந்து, திருப்பூருக்கு இரவு, 10.20 மணிக்கும், திருப்பூரிலிருந்து உடுமலைக்கு இரவு, 10.25 மணிக்கு இறுதி பஸ்சும் இயக்கப்படுகிறது.உடுமலை - திருப்பூர் செல்லும் வழிதடத்தில், பல்லடம் மற்றும் குடிமங்கலம், கோட்டமங்கலம், உட்பட பல்வேறு கிராமப்புற மக்கள் தொலைதுார பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.இக்கிராமங்களிலிருந்து உடுமலைக்கு தொழில் ரீதியாக வரும் மக்கள் இரவு நேரத்தில், கிராமப்புற பஸ்களும் இல்லாமல், திருப்பூர் செல்லும் பஸ்களும் இல்லாததால் திரும்பி செல்ல வேறுவழியின்றி, பஸ் ஸ்டாண்டில் தங்கும் நிலை ஏற்படுகிறது.கிராமப்புற மக்கள் மற்றும் திருப்பூர் செல்லும் பயணியர் பயன்பெறும் வகையில் இரவில், திருப்பூருக்கு பஸ் இயக்கப்படும் நேரத்தை கூடுதலாக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28-Mar-2025