தைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் மாணவியருக்கு அட்வைஸ்
திருப்பூர் : திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வு எழுதும் மாணவியருக்கு வாழ்த்து தெரிவித்து, ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவமேரி வரவேற்றார். 'பொதுத்தேர்வை நல்ல முறையில் எழுதி அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்து' எனும் தலைப்பில், திருப்பூர், மெஜஸ்டிக் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் மெஜஸ்டிக் கந்தசாமி பேசினார்.திருப்பூர் வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா பேசுகையில், ''இது தேர்வுக்கான காலம்; பொதுத்தேர்வில் முழு கவனம் செலுத்த வேண்டும். மனம் தடம் மாறாமல், தடுமாறாமல் இருக்க வேண்டும். நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் உங்கள் கவனத்தை திசை திருப்ப இன்று பல செயல்கள் நடக்கிறது. எனவே, சமூகவலைதளங்களில் மூழ்க வேண்டாம். தேர்வு மட்டுமே வாழ்க்கையல்ல. தேர்வு சரியாக எழுதவில்லை என்றால், மனம் தளர்ந்து விடக்கூடாது. அடுத்தடுத்த வாய்ப்பு தேடி வரும், மனக்குழப்பம் இல்லாமல் இருங்கள். தைரியத்துடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்,'' என்றார்.நிகழ்ச்சியில், மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.