மேலும் செய்திகள்
மானிய விலையில் உளுந்து வேளாண் துறை அழைப்பு
09-Jan-2025
உடுமலை : குடிமங்கலம் வட்டாரத்தில், தைப்பட்ட சாகுபடிக்கு தேவையான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, வட்டார வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்துக்கு இம்மாத இறுதியில், திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதையடுத்து சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். வரும் தைப்பட்டத்துக்கு தேவையான விதைகள் இருப்பு செய்யப்பட்டுள்ளதாக, வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.குடிமங்கலம் வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது: குடிமங்கலம் வேளாண் விரிவாக்க கிடங்கில் சோளம், கோ-32, கம்பு கோ-11, உளுந்து வம்பன்-8, பாசிப்பயறு வம்பன்-5 மற்றும் தட்டைப்பயறு வம்பன்-3 விதைகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகிக்க இருப்பு வைக்கப்பட்டுள்ளது.சோளம் கோ 32 ரகமானது 108-110 வயதுடையது; தீவனத்துக்கும் தானியத்துக்கும் உகந்த பயிராகும். மானவாரியாகவும், இறவையாகவும் பயிரிடலாம்.ஏக்கருக்கு, மானாவாரியாக, 840 கிலோ; இறவையாக, 1,164 கிலோ மகசூலும் தரக்கூடியதாகும்.மேலும், இது தண்டு துளைப்பான் மற்றும் தண்டு ஈ தாக்குதலுக்கு, பூச்சி எதிர்ப்பு சக்தியும், கரும்பூசணம் மற்றும் அடிசாம்பல் நோய்த்தாக்குதலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உடைய ரகமாகும்.கம்பு கோ 10 ரகமானது, 85-90 வயதுடையதாகும். சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டதும், மானாவாரியாக, ஏக்கருக்கு, 1,170 கிலோ; இறவையாக 1,410 கிலோவும் தரக்கூடியதாகும்.ஜன., ஏப் வரை, இறவையாகவும், ஜூலை, செப்., அக்., மாதத்தில், மானாவாரியாகவும் பயிரிட ஏற்ற ரகமாகும். எனவே, விதைகள் தேவைப்படும் விவசாயிகள், குடிமங்கலம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.
09-Jan-2025