உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கம்பு சாகுபடிக்கு  மானியத்தில் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

 கம்பு சாகுபடிக்கு  மானியத்தில் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

உடுமலை: மடத்துக்குளம் வட்டாரத்தில், மாநில சிறு தானிய இயக்கத்தின் கீழ், மாற்றுப்பயிர் சாகுபடியாக சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க, கம்பு விதை உள்ளிட்ட இடு பொருட்கள் மானியத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது: தமிழகத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரை வாலி, பனி வரகு போன்ற சிறுதானியங்களின் உற்பத்தி பரப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில், 26 மாவட்டங்களில் சிறுதானிய இயக்கம் திட்டம், 2023-24 முதல் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டு மடத்துக்குளம் வட்டாரத்தில், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் சிறுதானிய பரப்பை அதிகரிக்கும் வகையில், 300 ஏக்கர் பொது விவசாயிகளுக்கும், 25 ஏக்கரில் ஆதி திராவிட விவசாயிகளுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதிக பாசன நீர்ப்பயன்பாடு உள்ள நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு மாற்றாக, கம்பு பயிர் சாகுபடி செய்வதற்கு தேவையான இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், கம்பு விதை, திரவ உயிர் உரங்கள், சூடோமோனாஸ், நுண்ணுாட்ட கலவை மற்றும் அறுவடை மானியம் உள்ளிட்ட செலவினத்திற்கு, 1,250 மதிப்பிலான இடு பொருட்கள் வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் வட்டாரத்தில், கம்பு பயிரிட விவசாயிகள் தயார் நிலையில் உள்ளதால், தேவையான இடு பொருட்கள், வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் சிட்டா மற்றும் ஆதார், போட்டோ ஆகியவற்றை கொடுத்து, மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ