விதை, உரம் இருப்பு திருப்தி வேளாண் துறையினர் தகவல்
உடுமலை,; திருப்பூர் மாவட்டத்தில், நடப்பாண்டு இயல்பை விட, 60 மி.மீ., கூடுதலாக மழை பெய்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தின், ஆண்டு சராசரி மழை பொழிவு, 618.20 மி.மீ., ஆகும். நடப்பாண்டு பருவமழைகள் அதிகளவு பெய்துள்ளது. நடப்பாண்டு, பருவமழைகள் திருப்தியாக பெய்து, நேற்று வரை, 678.26 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது.ஆண்டு சராசரி மழை பொழிவை விட, கூடுதலாக, 60.06 மி.மீ., மழை கிடைத்துள்ளது. பருவமழைகள் காரணமாக, அமராவதி அணை மற்றும் கிராமங்களிலுள்ள குளம், குட்டை, தடுப்பணைகள் நிரம்பியுள்ளன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வறட்சி நிலை நீங்கியுள்ளது. மழை பொழிவால், விவசாயிகள் மனம் மகிழந்து விவசாய பணிகளில் தீவிரமடைந்துள்ளனர்.இதனால், சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் உரம் உள்ளிட்ட இடு பொருட்கள் தேவையான அளவு இருப்பு உள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில், நெல் விதை, 13.21 டன், தானிய பயிறு வகை விதைகள், 43.13 டன், பயறு வகை பயிறுகள், 19.79 டன், எண்ணெய் வித்து பயிர் விதைகள் 47.93 டன் இருப்பு உள்ளது.பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளது. யூரியா, 3,278 டன்; டி.ஏ.பி., 630 டன்; காம்ப்ளக்ஸ், 4,288 டன்; சூப்பர் பாஸ்பேட், 793 டன் இருப்பு உள்ளது.விதை, உரம் தேவைப்படும் விவசாயிகள் தகுந்த ஆவணத்துடன், வேளாண் துறையை அணுகி பெற்றுக்கொள்ளலாம், என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.