மேலும் செய்திகள்
செயற்கை நுண்ணறிவுக்கான விதிகளை உருவாக்க திட்டம்
08-Oct-2025
ஆ ண்டுதோறும், அக்., 24ல், உலக வளர்ச்சி தகவல் தினமாக, ஐ.நா., சபை அறிவித்திருக்கிறது. இந்தாண்டின் மையக்கருத்து, 'தகவல்களை அணுகுவதன் வாயிலாக வளர்ச்சியை மேம்படுத்துதல்' என்பது தான். தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்திருக்கிறது. அமெரிக்காவின் ஸ்டார்ன்போர்டு பல்கலை வெளியிட்டுள்ள உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள பேராசிரியர் அசோக்குமார் வீரமுத்து கூறியதாவது: செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி, மனித குலத்துக்கு பல நன்மைகளை வழங்கினாலும், வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம், சட்டம், தொழில் துறை மற்றும் சமூக நம்பிக்கை உட்பட துறைகளில், அதன் தாக்கத்தை உணர முடிகிறது. பல நிறுவனங்கள் ஏ.ஐ., பயன்படுத்துவதால், லட்சக்கணக்கான பணியிடங்கள் ஆபத்தில் உள்ளன. உற்பத்தி, வங்கி, சட்டம் மற்றும் கம்ப்யூட்டர் மென்பொருள் மேம்பாடு போன்ற துறைகளில் மனித ஆற்றல் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. மருத்துவத் துறையில், நோயறிதலில் ஏ.ஐ., யின் தரவுகள், மருத்துவர்களுக்கு பேருதவி புரிகின்றன. கல்வித்துறையிலும், ஏ.ஐ., கோலோச்ச துவங்கியிருக்கிறது; இதனால், மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் சுய சிந்தனை குறையும் அபாயம் உள்ளது. ஏ.ஐ., கருவிகள் வகுப்பறையில் கற்றல் முறையை மேம்படுத்தினாலும், ஆசிரியர் - மாணவர் இடையேயான உணர்வுப்பூர்வ புரிதல் குறைகிறது. சில நேரங்களில் ஏ.ஐ., வாயிலாக உருவாக்கப்படும் தவறான தகவல், பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது. பிரான்ஸில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு போன்ற நிகழ்வுகள், ஏ.ஐ., யின் சவால்கள் குறித்து உலகம் முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும். ஏ.ஐ., மனித வாழ்க்கையை முன்னேற்றமடைய செய்தாலும், அதன் ஆபத்துகளை உணர்ந்து அதன் பயன்பாடு மற்றும் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்ட, நெறிமுறைகளை வகுக்கும்பட்சத்தில், பாதகங்களை தவிர்த்து, சாதகங்களை அதிகளவில் பெற முடியும். இவ்வாறு, அவர் கூறினார். - இன்று (அக். 24) உலக வளர்ச்சி தகவல் தினம்.
08-Oct-2025