விசைத்தறி தொழிலுக்கு வலு சேர்க்க ஏ.ஐ., தொழில்நுட்பம்!
'ஏ.ஐ.,' தொழில்நுட்பம், இனிவரும் நாட்களில், விசைத்தறி நெசவு தொழிலுக்கு, வலுவான அடித்தளமிடும் என, தொழில்நுட்ப வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.உலக நாடுகள் அறிவித்துள்ளபடி, நடப்பு நிதியாண்டு என்பது, 'ஏஐ' தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யும் ஆண்டாக அமைந்துள்ளது. எத்தகைய தொழிலாக இருந்தாலும், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தால், ஏற்றதொரு வளர்ச்சியை கொடுக்கும் என்ற, அபார நம்பிக்கையுடன் அனைவரும் கூறுகின்றனர்.ஒட்டுமொத்த ஜவுளி மட்டுமல்லாது, பல்வேறு வகை தொழில்பிரிவுகளையும், இத்தொழில்நுட்பம் வளர்ச்சியடைய செய்யும். அதன்படி, ஈரோடு மற்றும் பல்லடம் சுற்றுப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ள விசைத்தறி தொழிலுக்கும், சீரான விசையூட்டும் என்று நம்பிக்கை பிறந்துள்ளது.'நுண்ணறிவு இயந்திர ஆட்டோமேஷன்' தொழில்நுட்பத்தால், தானியங்கி நெசவுத்துறை மூலம், இயந்திர செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது.இதன்மூலமாக, துணி உற்பத்தி திறன் மேம்படும். விசைத்தறி மற்றும் உதிரி பாகங்களில் ஏற்படும் பாதிப்புகளையும், பழுதுகளையும் முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது. இதன்மூலம், முன்கூட்டியே, தேவையான பராமரிப்பு பணிகளை செய்ய முடியும்.கம்ப்யூட்டர் வழியாக கண்காணிக்கப்படுவதால், நுால் மற்றும் துணிகளை ஆய்வு செய்து, நெசவில் குறைபாடு இருப்பது தெரியவந்தால், துல்லியமாக கண்டறிந்து சரிசெய்யவும் வழிகாட்டுகிறது. விசைத்தறிகளில் கேமரா பொருத்துவதன் மூலமாக, துணியின் தரத்தையும் ஆய்வு செய்ய முடியும். அதாவது, 'எஸ்.டி., - திங்கர்' என்ற தானியங்கி கருவி பொருத்துவதால், 24 மணி நேரமும் கண்காணித்து, நெசவு செய்யப்படும் துணியின் தரத்தை உடனுக்குடன் தெரிவிக்கும். தர நிர்ணயம் செய்வதற்கான கருவிகளையும் இணைத்து, கண்காணிக்கலாம்.உற்பத்தியை குறித்த நேரத்தில் முடிப்பதுடன், உற்பத்தி செலவுகளையும், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தால் குறைக்க முடியும். 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தில், மின்நுகர்வு கட்டுக்குள் வரும் என்பதால், மின்சார செலவையும் சேமிக்க முடியும். நவீன துணி வடிவமைப்பு மற்றும் நிலையான உற்பத்திக்கு, புதிய தொழில்நுட்பம் கைகொடுக்கும். நாட்டின் முக்கிய துணி நகரங்களில் ஒன்றாக, கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகள் மாறியுள்ளன. 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தால், விசைத்தறி ஜவுளி உற்பத்தி மேம்படும். தானியங்கி நெசவு தொழிலுக்கான முக்கியத்துவம் பெற்றுள்ள பல்லடம், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தால், இயந்திரங்களை மேம்படுத்தி, உற்பத்தி திறனையும் அதிகரிக்க செய்ய முடியும்.நீண்ட நாட்களாக, தொழில்நுட்ப மேம்பாடு இல்லாததால், விசைத்தறி தொழில் வளர்ச்சியில் முட்டுக்கட்டை ஏற்படுகிறது. சாதாரண தறிகளையும், 'ஏ.ஐ.,' தொழில்நுட்ப மேம்பாடு செய்தால், இத்தொழிலில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக, தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். வலுவான அடித்தளம்...
இதுகுறித்து 'ஸ்டார்ட் அப் இந்தியா' வழிகாட்டி ஆலோசகர் ஜெய்பிரகாஷ் கூறுகையில், ''ஈரோடு, பல்லடம் பகுதிகளில், 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தை செயல்படுத்தினால், விசைத்தறி தொழிலின் திறன் பலமடங்கு அதிகரிக்கும். குறைபாடு இல்லாத உற்பத்தி, செலவின குறைப்பு, நிலையான வளர்ச்சி ஆகிய வற்றில், பெரிய மாற்றம் ஏற்படும்.'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தை சரிவர பயன்படுத்தினால், விசைத்தறி தொழிலுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும். 'ஏ.ஐ.,' தொழில்நுட்ப அமலாக்கம் குறித்து விரைவில், விரிவான வழிகாட்டுதல் வழங்கப்படும்,'' என்றார்.