உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காற்று மாசு; 15 நாள் ஆய்வு

காற்று மாசு; 15 நாள் ஆய்வு

திருப்பூர்,; வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது; பண்டிகைக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ளன. மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில், பனியன் நகரான திருப்பூரில், வரும் 13 முதல் 27ம் தேதி வரை, தொடர்ந்து 15 நாட்களுக்கு காற்று மாசு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. வரும் 13ம் தேதி காலை, 6:00 மணி முதல், 19ம் தேதி வரை, பண்டிகைக்கு முந்தைய காற்று மாசு; 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை பண்டிகை கால காற்று மாசும் அளவிடப்பட உள்ளது. மாசுகட்டுப்பாடு வாரிய ஆய்வக தலைமை விஞ்ஞானி மணிசேகர் (கூடுதல் பொறுப்பு) தலைமையிலான குழுவினர், காற்று மாசு அளவீடு பணிகளை மேற்கொள்கின்றனர். காற்று மாசு அளவீடு செய்வதற்காக, மாசுகட்டுப்பாடு வாரிய வடக்கு பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ள குமரன் வணிக வளாகம்; குடியிருப்புகள் நிறைந்த ராயபுரத்தில் என, இரண்டு இடங்களில் 'ஆம்பியன் ஏர்குவாலிட்டி மெஷர்மென்ட்' கருவி வைக்கப்பட உள்ளது. இந்த கருவியினுள் பில்டர் காகிதம் வைக்கப்பட்டு, காற்றில் கலந்துள்ள 2.5 மற்றும் 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண் துகள்கள்; சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு அளவுகள் பதிவு செய்யப்படும். வரும் 13ம் தேதி மாலை, 6:00 முதல் இரவு 12 மணி வரை, பண்டிகைக்கு முந்தைய ஒலி மாசு; 20ம் தேதி மாலை முதல் பண்டிகை நாள் ஒலி மாசு அளவீடு செய்யப்படும். நடப்பாண்டு பண்டிகைக்கு முந்தைய மற்றும் பண்டிகை நாள் காற்று மாசு அளவீடுகள்; கடந்தாண்டு பண்டிகை கால காற்று மாசு அளவீடுகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டு, மாசுகட்டுப்பாடு வாரிய தலைமைக்கு அனுப்பிவைக்கப்படும். தீபாவளி நாளில், திருப்பூரில் காற்று, ஒலி மாசு சீராக உள்ளதா; எல்லை மீறுகிறதா என்கிற விவரங்கள், ஆய்வு முடிவில் தெரியவரும். இதுதான் எல்லை சுவாசிக்க தகுந்த காற்றில் கலந்துள்ள நுண் துகள்களின் அளவு எவ்வளவு இருக்கவண்டும் என்கிற அளவீடுகளை மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் வரையறுத்துள்ளது. அந்தவகையில், 10 மைக்ரானுக்கு கீழ் உள்ள நுண்துகள்கள் 100 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப்க்குள் இருக்கவேண்டும்; 2.5 மைக்ரானுக்கு கீழ் உள்ள துகள்கள், 60க்குள் இருக்கவேண்டும். சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடுகள், 80 மைக்ரோ கிராம் / மீட்டர் க்யூப்க்குள் இருக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை