உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி சர்க்கரை ஆலை புனரமைப்பில்  நீடிக்கும் மர்மம்!: போராட தயாராகும் கரும்பு விவசாயிகள்

அமராவதி சர்க்கரை ஆலை புனரமைப்பில்  நீடிக்கும் மர்மம்!: போராட தயாராகும் கரும்பு விவசாயிகள்

உடுமலை: உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த முதல்வர் அறிவித்தும், அரசு நிதி ஒதுக்காததால், அதிருப்தியிலுள்ள விவசாயிகள், வரும், ஜன., 20 முதல், ஆலை முன் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். உடுமலை கிருஷ்ணாபுரத்தில், தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக, 1960ல், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை துவக்கப்பட்டது. திருப்பூர், கோவை, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 20 ஆயிரம் கரும்பு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். நாள் ஒன்றுக்கு, 2 ஆயிரம் டன் கரும்பு அரவைத்திறன், அதிக பிழிதிறன், துணை நிறுவனமாக எரிசாராயம், எத்தனால் உற்பத்தி ஆலை சிறப்பு வாய்ந்த நிறுவனமாக செயல்பட்டு வந்தது. சர்க்கரை ஆலையின் இயந்திரங்கள் தேய்மானம், பழுது காரணமாக, கடந்த 2023 முதல் ஆலை உற்பத்தி இல்லாமல் முடங்கியுள்ளது. கடந்த ஆக.,11ல், உடுமலை வந்த தமிழக முதல்வர், ஆலையை புனரமைத்து, மீண்டும் இயக்க வல்லுனர் குழு அமைக்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து, செப்.,9ம் தேதி வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சர்க்கரைத்துறை ஆணையர் அன்பழகன் தலைமையிலான, தலைமை பொறியாளர், தொழில்நுட்ப வல்லுனர்கள், வேளாண் இணை இயக்குனர், மத்திய அரசின் கரும்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி, வேளாண் பல்கலை உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர், அக்., 10ம் தேதி சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆலையை புனரமைக்க தேவைப்படும் நிதி, கரும்பு சாகுபடி பரப்பு மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு, முழுமையாக ஆலையை நவீனப்படுத்த, ரூ.180 கோடி தேவைப்படும் என விரிவான திட்ட அறிக்கையை, வேளாண்துறை அமைச்சகம் மற்றும் தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கினர். ஆனால், அறிக்கை வழங்கி, மூன்று மாதமாகியும் ஆலைக்கான நிதி ஒதுக்காமல், அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து, சர்க்கரை துறை இயக்குனர் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டால், அரசுக்கு அறிக்கை வழங்கியாச்சு என்ற பதில் மட்டுமே வருகிறது. தொடர்ந்து, 4வது ஆண்டாக நடப்பாண்டும், ஆலை இயக்கம் முடங்கியுள்ளதோடு, துணை நிறுவனமான எரிசாராய ஆலையும் மூடப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி மதிப்பிலான தொழிற்சாலைகள் பாழாகி வருவதோடு, இதனை சார்ந்து, மூன்று மாவட்டங்களில், 12 சட்டசபை தொகுதியிலுள்ள பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வு கேள்விக்குறியாகிறது. ஜன.,20 முதல் போராட்டம் எனவே, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், உடனடியாக அமராவதி சர்க்கரை ஆலைக்கு நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி, வரும் ஜன.,20 முதல், ஆலை முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். போராட்டத்திற்கு தயாராகும் வகையில், ஆலை வாயிலாக பயன்பெறும் கிராம விவசாயிகளிடம் ஆயத்த கூட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால், வரும் சட்டசபை தேர்தலில், 12 தொகுதிகளில் இப்பிரச்னை எதிரொலிக்கும் வாய்ப்புள்ளது. அமராவதி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வீரப்பன் கூறியதாவது: தமிழகத்திலேயே, அதிக சாகுபடி பரப்பு, பிழிதிறன், சர்க்கரை உற்பத்தி, எரிசாராயம், எத்தனால் ஆலை என சிறப்பாக செயல்பட்டு வந்த, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்திய நிலையில், தமிழக முதல்வர் புனரமைக்கப்படும் என உறுதியளித்தார். வல்லுனர் குழு ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை வழங்கியும், மீண்டும் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. கரும்பு சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில், கூட்டுறவு ஆலை மூடப்பட்டுள்ளதால், கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் , தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. விவசாயிகள் பங்களிப்பு தொகையால் உருவான ஆலை, பாழடைந்து வருவது, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலையை புனரமைத்து இயக்கினால், சில ஆண்டுகளில் லாபம் ஈட்டி, அரசு ஒதுக்கும் நிதியை திரும்ப வழங்கும் வகையில், கட்டுமானம், சர்க்கரை உற்பத்தி , எத்தனால் உற்பத்தி திறன் உள்ள ஆலையாகும். ஆனால், அரசு நிதி ஒதுக்காமல், புறக்கணிப்பது ஏன் என தெரியவில்லை. அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைக்க உடனடியாக நிதி ஒதுக்க வலியுறுத்தி, ஆலை முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தும் வகையில், கிராமங்கள்தோறும் விவசாயிகள் பங்கேற்கும் ஆயத்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரசு நிதி ஒதுக்கி, பணியை துவக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ram
டிச 26, 2025 14:51

அடுத்த தடவ திருட்டு திமுகவுக்கு வோட்டு போடுங்க முடித்துவிடுவார் ஆலையை , அவனுக ஆளே benami பேரில் வாங்கிவிடுவான்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை