உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  எனக்கு, 500... அவங்களுக்கு, 500 பங்கு பிரித்து லஞ்சம் கேட்ட ஊழியர்

 எனக்கு, 500... அவங்களுக்கு, 500 பங்கு பிரித்து லஞ்சம் கேட்ட ஊழியர்

பல்லடம்: பல்லடம் அருகே 'எனக்கு 500, அவங்களுக்கு, 500 ரூபாய் வேண்டும்,' என்று, தற்காலிக பணியாளர் ஒருவர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியானதால், இருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரேவதி, 34 மற்றும் தனலட்சுமி 32. இருவரும், கணபதிபாளையம் ஊராட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிக (கம்ப்யூட்டர் ஆபரேட்டர்) பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது வீட்டுக்கு வீட்டு வரி செலுத்த கேட்டு, ரேவதியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டார். அந்த உரையாடல் விவரம்: விவசாயி: ஏனுங்க, என்ட்ற வூட்டுக்கு வரி கட்டோணும். ரேவதி: பணம் கொடுத்து விடுங்கள் ரசீது போட்டு வைக்கிறேன். விவசாயி: எவ்ளோ கொடுக்கோணும்? ரேவதி: 2,500 ரூபாய் ஆகிறது. விவசாயி: ஆயிரம் ரூபா எச்சா (அதிகமாக) உள்ளதே. ரேவதி: நீங்கள் அவசரப்படுத்துவதால், எனக்கு, 500 ரூபாய், அவங்களுக்கு (தனலட்சுமி), 500 ரூபாய். நான் முகாமில் உள்ளேன். வேலையை முடித்துவிட்டு ரசீது போட்டுத் தருகிறேன். இவ்வாறு ரேவதி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த பல்லடம் பி.டி.ஓ. கனகராஜ் விசாரணை நடத்தினர். அதில், தகவல் உண்மை தான் என்று தெரியவர, உடனடியாக இருவரையும் பணியில் இருந்து நீக்கினார். இது குறித்து, பி.டி.ஓ. கூறுகையில், 'கணபதிபாளையம் ஊராட்சியில் வேலை பார்க்கும் தற்காலிக பணியாளர்கள் லஞ்சம் கேட்ட ஆடியோ நேற்று (நேற்று முன்தினம்) எனக்கும் வந்தது. இது குறித்து விசாரிக்கையில், அவர்கள் லஞ்சம் கேட்டது உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரும் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர்,' என்றார். கிராமத்தில் பணியாற்றும் ஊழியர்கள், சர்வசாதாரணமாக லஞ்சம் கேட்பது, பல்லடம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, பொதுமக்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ