உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடி பணியாளர் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர் காத்திருப்பு போராட்டம்

திருப்பூர்; ஒரு மாதம் கோடை விடுமுறை அளிக்க வலியுறுத்தி திருப்பூரில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை காலம் முழுவதும் விடுமுறை அளிக்க கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.திருப்பூரில், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் அங்கன்வாடி ஊழியர்கள், 500க்கும் மேற்பட்டோர் திரண்டு, காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் சித்ரா, செயலாளர் கே.சித்ரா உள்பட நிர்வாகிகள், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நடப்பாண்டு, 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டநிலையில், தற்போது 15 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் வாட்டி வருகிறது. குழந்தைகள் அங்கன்வாடிக்கு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.ஏற்கனவே உறுதியளித்தபடி, அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 30 நாட்கள் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுவும் சோதனை தான்

திருப்பூரில் கோடை வெயில் வாட்டிவருகிறது. நேற்று காலை, 7:00 மணி முதலே எட்டிப்பார்த்த வெயில், நேரம் செல்லச்செல்ல உக்கிரமானது. அங்கன்வாடி ஊழியர்கள், ஷாமியானா பந்தல் ஏதும் அமைக்காமல், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், அமர்ந்திருந்தனர். மர நிழலையும் தாண்டி, வெயில் தகித்தது. இதையடுத்து, குடைகளை பிடித்தும், சேலைகளை எடுத்துவந்து, தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு அமர்ந்தனர்.மாலை நேரம், திடீரென காலநிலை மாறியது. பலத்த காற்று வீசியது. மாலை, 4:20 மணி முதல், 4:45 மணி வரை இடியுடன், மழை பெய்தது. விடியவிடிய காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்த அங்கன்வாடி பணியாளர்கள், நாளை (இன்று) காலை முதல் மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்துவிட்டு, இரவு, 7:40 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ