பல்லடம் : முதல்வர் பல்லடம் வருவதை முன்னிட்டு, ஜவுளி தொழிலை பாதுகாக்கும் நோக்கில், மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில், தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் மாநாடு நாளை நடைபெற உள்ளது. எம்.பி., கனிமொழி தலைமையில் நடக்க உள்ள இந்த மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மின் கட்டணம் அதிகம் ஜவுளி தொழில் துறையினர் கூறியதாவது: தற்போதைய சூழலில், அண்டை மாநிலங்களுடன் போட்டி போட முடியாத நிலையில்தான் ஜவுளி உற்பத்தி தொழில் உள்ளது. உற்பத்தி செலவு அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம். ஸ்பின்னிங், சைசிங், ஓ.இ., மில், வீவிங் உள்ளிட்ட ஜவுளி தொழில் சார்ந்த அனைத்துமே மின்சாரத்தில்தான் இயங்கி வருகின்றன. அண்டை மாநிலங்களில், யூனிட்டுக்கு, 4 முதல் 5 ரூபாய் வரை தான் மின் கட்டணத்துக்கு செலவாகிறது. ஆனால், தமிழகத்தில், 10 ரூபாய் வரை மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போட்டி போட முடியாது அண்டை மாநிலங்களில் தொழில் துறையினருக்கு சலுகைகள் வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில், மின் கட்டணம் இரட்டிப்பாக உள்ளது. இதன் காரணமாக, உற்பத்தி செலவு அதிகரித்து, மற்ற மாநிலங்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், இங்கு உற்பத்தி செய்யும் துணிகளுக்கு பதில், விலை குறைவாக உள்ள மற்ற மாநிலங்களில் இருந்து துணிகளை கொள்முதல் செய்யும் சூழல் ஏற்பட்டு வருகிறது. ஏன் முடியவில்லை? இதே நிலை நீடித்தால், எதிர்வரும் நாட்களில், இங்கு துணி உற்பத்தி என்பதே இல்லாமல் போய்விடும். இதர மாநிலங்களில் தொழில்துறையினருக்கு சலுகைகள் வழங்கப்படும் போது, தமிழக அரசால் மட்டும் ஏன் இதை செய்ய முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஜவுளி தொழில் துறை தமிழகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றால், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஜவுளி தொழில் துறைகளுடன் இதுகுறித்து ஆலோசிக்க வேண்டும். ஜவுளித்தொழில் மேம்பாடு, மின் கட்டணம் குறைப்பு தொடர்பான முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தரும் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். உற்பத்திச்செலவு அதிகரிக்கிறது தமிழகத்தின் மின் கட்டணம் தான், ஜவுளி தொழில் துறைக்கு மிகவும் நெருக்கடியை உண்டாக்கி வருகிறது. உற்பத்தி செலவு அதிகரிக்க இதுவே காரணமாக உள்ளது. மின் கட்டணம் குறைந்தால் மட்டுமே, துணிகளுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறையும் என்பதால், போட்டியின்றி துணிகளை விற்பனை செய்ய முடியும். பல்லடம் வரும் முதல்வர், பல்லடத்தின் பிரதான தொழிலான ஜவுளி தொழில் துறையை பாதுகாக்கும் நோக்கில், மின் கட்டணத்தை குறைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம். -- சக்திவேல், ஒருங்கிணைப்பாளர், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம்.