மேலும் ஒரு பெண் யானை வனத்தில் மர்மச்சாவு
உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம், உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட, தளி பிரிவு, குழிப்பட்டி சுற்று, நல்லாறு பகுதியில், 22 வயது பெண் யானை இறந்து கிடந்தது.தகவல் கிடைத்ததும், வன அதிகாரிகள் குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்று யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் யானை, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இருதய கோளாறு காரணமாக இறந்திருக்கலாம். இறந்து கிடந்த யானையை, அதன் குட்டி சுற்றி சுற்றி வந்துள்ளது. தாயை பிரிந்த குட்டியை, இயற்கை சூழல் மாறாத நிலையில், யானை கூட்டத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றனர்.வன ஆர்வலர்கள் கூறுகையில், 'கோவை பகுதிகளில் அதிகளவு யானைகள் இறந்து வரும் நிலையில், உடுமலை, அமராவதி வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. தற்போது, மர்மமான முறையில் பெண் யானை இறந்திருப்பதும், சிறுநீரகம், இருதய பாதிப்பு என்பது ஏற்புடையது அல்ல; நோய் பாதிப்பு இருந்தால், பல நாட்கள் வனத்திற்குள் உணவின்றி சுற்றியிருக்கும். முறையாக வனத்துறை ரோந்து சென்று, கண்காணித்திருக்க வேண்டும்' என்றனர்.