உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இல்லாத பணியிடத்துக்கு அலுவலர் நியமித்து... கூத்து! இப்படி இருக்கலாமா மாநகராட்சி நிர்வாகம்?

இல்லாத பணியிடத்துக்கு அலுவலர் நியமித்து... கூத்து! இப்படி இருக்கலாமா மாநகராட்சி நிர்வாகம்?

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் வருவாய் மற்றும் சுகாதார பிரிவில் அரசாணை மற்றும் நடைமுறையில் இல்லாத பதவிகளில் அலுவலர்கள் பணியாற்றும் 'கூத்து' நடக்கிறது. நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்ற வேண்டிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 10 லட்சம் மக்கள் தொகை மற்றும் 5 மண்டலங்கள் கொண்ட மாநகராட்சி, நான்கு மண்டலங்கள் கொண்ட மாநகராட்சி; ஐந்து லட்சம் மற்றும் மூன்று லட்சம் மக்கள் தொகை என பிரிவுகள் உள்ளன. திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலங்கள் கொண்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட சிறப்பு நிலை 'அ' பிரிவு மாநகராட்சியாக கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகராட்சிகளுக்கு இணையாக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் புதிய வரைமுறைகளின் படி பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பணியிடங்கள் அதன்படி மைய அலுவலகத்தில் கூடுதல் இயக்குனர் அந்தஸ்தில் ஒரு கமிஷனர், இணை இயக்குனர் அந்தஸ்தில் இரு துணை கமிஷனர், நான்கு மண்டலங்களில் சிறப்பு நிலை கமிஷனர் அந்தஸ்தில் மண்டல உதவி கமிஷனர்கள் ஆகிய பணியிடங்கள் உள்ளன. வருவாய் பிரிவில் தேர்வு நிலை கமிஷனர் அந்தஸ்தில் உதவி கமிஷனர், நிர்வாக பிரிவில் ஒரு உதவி கமிஷனர், கணக்கு பிரிவில் ஒரு உதவி கமிஷனர், மாமன்ற செயலாளர் உள்ளிட்ட மொத்தம், 335 அலுவலர் பணியிடங்கள் உள்ளன. சிறப்பு ஆர்.ஐ.? வருவாய் பிரிவில் இரு மண்டலத்துக்கு தலா ஒன்று என மொத்தம் இரண்டு மேற்பார்வையாளர், மண்டலத்துக்கு தலா ஒரு உதவி வருவாய் அலுவலர் மற்றும் தலா நான்கு உதவியாளர்கள், நான்கு நேர்முக உதவியாளர்கள், எட்டு இளநிலை உதவியாளர்கள், 20 வரி வசூலர்கள், உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்க வேண்டும். ஆனால், இந்த பிரிவில் சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் என்ற பெயரில் மண்டலத்துக்கு தலா இரண்டு என மொத்தம் எட்டு பேர் உள்ளனர். இதில் ஒருவர் கடந்தாண்டு ஓய்வு பெற்று விட்டார். தற்போது ஏழு பேர் எந்த விதமான தனிப் பொறுப்புகள் இல்லாத பணியிடத்தில் பணியாற்றுகின்றனர். முந்தைய தனி அலுவலர் பதவிக்காலத்தின் போது இவர்களுக்கு இந்த பதவி வழங்கப்பட்டு பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். வழிமொழிதல் மட்டுமே... உயர் அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவை அடுத்த நிலையில் உள்ள ஊழியர்களுக்கு வழிமொழிவது மட்டுமே இவர்கள் பணியாக உள்ளது. இதுதவிர தனிப்பட்ட பொறுப்புகள் எதுவும் இவர்களுக்கு இல்லை. இந்த பணியிடமே, அரசாணையில் எங்கும் இடம் பெறவில்லை. பிரச்னை என்று வரும்போது, இவர்கள் எந்தப் பொறுப்பும் இல்லாததால் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இவர்களுக்கு இல்லை. வரிவிதிப்பு குளறுபடி போன்ற பிரச்னைகளிலும் இவர்கள் சிக்குவதில்லை. இதுகுறித்து அலுவலர்களால் சுட்டிக்காட்டப்பட்டும், 'சும்மா' இருக்கும் பொறுப்புகள் தொடர்கின்றன. நல்லா நடக்குதில்ல மாநகராட்சி நிர்வாகம்! அமுங்கிய பிரச்னை சுகாதாரப் பிரிவில் ஒரு மாநகர் நல அலுவலர், ஒரு உதவி மாநகர் நல அலுவலர், 25 சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. திருப்பூர் மாநகராட்சிக்கு சுகாதார அலுவலர் என்ற ஒரு பணியிடமே இல்லை. ஆனால், மண்டலத்துக்கு ஒரு சுகாதார அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாமன்ற கூட்டத்தில் காங். கவுன்சிலர் செந்தில்குமார் கேள்வி எழுப்பிய போது தான் இந்த விஷயம் வெளியே வந்தது. தற்போது குப்பை பிரச்னை பெரிய அளவில் நிலவி வரும் நிலையில் அவர்கள் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. இதனால், இப்பிரச்னை அப்படியே அமுங்கி விட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை