உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வணிகர்களை குற்றவாளிபோல் பார்ப்பதா? ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

வணிகர்களை குற்றவாளிபோல் பார்ப்பதா? ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பல்லடம்: ''வணிகர்களை குற்றவாளியாக பார்ப்பதை ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்'' என, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைமைச் செயலாளர் ராஜ்குமார் கூறினார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், அவர் நேற்று கூறியதாவது: ஜி.எஸ்.டி., குறைப்பு காரணமாக பொதுமக்கள் அதிகளவு பயன் பெற்று வருகின்றனர். வணிகர்களும் பயன்பெற வேண்டும் எனில், ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலின் போது பின்பற்றப்படும் விதிமுறைகளை தளர்த்த வேண்டும். ஒட்டுமொத்த பொதுமக்களுக்கான பயன் என்பது இரண்டடுக்கு ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் நிறைவேறி உள்ளது. வணிகர்களின் வேண்டுகோள், இதை ஓரடுக்காக மாற்ற வேண்டும்என்பதுதான் ஜி.எஸ்.டி. தாக்கல் செய்யும்போது ஏதேனும் சிறிய பிழை ஏற்பட்டாலும் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாயை ஈட்டி தரும் வணிகர்களை, ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மரியாதையில்லாமல் நடத்துவதுடன், குற்றவாளிகள் போல் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பார்வைக்கு கொண்டு சென்றவுடன் உ.பி.,யில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், 'வணிகர்களை மதிக்க வேண்டும்' என, அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதை வரவேற்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

கோவையில் பாராட்டு விழா

நிர்மலா சீதாராமன்

பங்கேற்பு

''நவ. 11ல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஜி.எஸ்.டி. சீராய்வு மற்றும் வரி குறைப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா நடக்கிறது. மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். இதில் பங்கேற்க உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், 11 முக்கிய கோரிக்கைகளை வைக்க உள்ளோம். அதை அவர் பரிசீலித்து நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார் ராஜ்குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rajasekar Jayaraman
அக் 29, 2025 03:29

விலையை குறைக்காமல் விற்பனை செய்தால் குற்றவாளி தான் அரசை ஏமாற்றும் குற்றவாளி.


Venugopal, S
அக் 28, 2025 19:52

ஜீ எஸ் டீ கட்டாமல் ஏமாற்றி கேட்டால் கஸ்டமருக்கு discount அப்டின்னு தலையில் மிளகாய் அரைப் பான். இதுலே யோக்கியன் மாதிரி பேசுவான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை