தீபாவளி சீட்டு ரூ.1 கோடி சுருட்டியவர் கைது
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை, சத்யா காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார், 45. கருமாரம்பாளையத்தில், 'ஸ்ரீ பரமேஸ்வரா குரூப்ஸ்' என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில், வாராந்திர சீட்டு, ஏலச்சீட்டு, பலகார சீட்டு என, பல சீட்டு நடத்தினார். அப்பகுதி மக்கள், சீட்டில் சேர்ந்து வாரம் மற்றும் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். தீபாவளி சீட்டு முதிர்வடைந்த நிலையில், பணம் செலுத்தியவர்களுக்கு முதிர்வு தொகையை திருப்பி தரவில்லை.செந்தில்குமார் தலைமறைவானார். ஏமாந்தவர்கள், கடந்த வாரம், ஊத்துக்குளி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்; திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.விசாரணையில், நுாற்றுக்கும் மேற்பட்டோரிடம், 1 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து ஏமாற்றியது தெரிந்தது.திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, செந்தில்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.