உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கேட்டது ஓரிடம்... அமைத்தது வேறிடம்! தேவையில்லாத வேகத்தடை எதற்கு? பொதுமக்கள் கேள்வி: அதிகாரிகள் மவுனம்

கேட்டது ஓரிடம்... அமைத்தது வேறிடம்! தேவையில்லாத வேகத்தடை எதற்கு? பொதுமக்கள் கேள்வி: அதிகாரிகள் மவுனம்

அவிநாசி; அவிநாசி, மங்கலம் ரோட்டில் பெரிய கருணைபாளையம் பிரிவில் பல ஆண்டுகளாக வேகத்தடை அமைக்க கோரிக்கை அளித்த நிலையில், சம்பந்தமில்லாத அதுவும் குறுகிய இடத்தில் வேகத்தடை அமைத்தது, மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. அவிநாசி, மங்கலம் ரோட்டில் பெரிய கருணைபாளையம் பிரிவு உள்ளது. இந்த ரோட்டில், கன்டெய்னர் லாரிகள் மற்றும் இயந்திர சாதனங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் என நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வாறு அதிகளவு வாகனங்கள் செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஒருசில நேரத்தில், உயிரிழப்பும் ஏற்படுகிறது. அவ்வகையில், கடந்த ஜன., முதல் ஆக., வரை, 11 பெரிய விபத்துகளும், 45 சிறு விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதால் அப் பகுதியினர் பெரிய கருணைபாளையம் சந்திப்பில் இரு புறங்களிலும் வேகத்தடை அல்லது வேகத் தடுப்புகள் வைக்க கோரிக்கை அளித்து வந்தனர். ஆனால், போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலை துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விபத்துகள் தொடர்கதையானது. இந்நிலையில் பெரிய கருணை பாளையம் பிரிவுக்கு முன் உள்ள சிறு வளைவு பகுதியில், தரைமட்ட பாலத்தின் முன்பாக போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தலின்படி நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை அமைத்துள்ளனர். அதிலிருந்து 20 அடி துாரத்தில் மீண்டும் ஒரு வேகத்தடை என மூன்று வேகத்தடைகள் குறுகிய துார பகுதிகளுக்குள் அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நல்லது நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ரவிக்குமார் கூறுகையில், ''பல ஆண்டுகளாக பெரியகருணைபாளையம் பிரிவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்தது. இதனை கருத்தில் கொண்டு வேகத்தடை அல்லது வேகத் தடுப்புகள் அமைக்க வேண்டும் என பலமுறை மனுக்கள் அளித்திருந்தோம். ஆனால், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி வேகத்தடை அமைக்க மறுத்து விட்டனர். ஆனால், இப்போது சம்பந்தம் இல்லாத இடத்தில் மூன்று வேகத்தடைகளை அமைத்துள்ளனர். விபத்து நடக்கும் இடத்தில் வேகத்தடை அமைக்காமல், அதற்கு முன், 150 அடி துாரத்தில் வேகத்தடை எதற்காக அமைக்கப்பட்டது என தெரியவில்லை,'' என்றனர். இந்த விவகாரம் குறித்து நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செங்குட்டுவேல் மற்றும்போக்குவரத்து போலீசார் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்க மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது இருவரும் அழைப்பை ஏற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !