தடைபட்ட அத்திக்கடவு நீர் புதர் மண்டிய கட்டுமானம்
திருப்பூர்,; திருப்பூர் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில், அத்திக்கடவு திட்டத்தின் கீழ் நீர் வினியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுகிறது. இதில், திருப்பூர் நஞ்சராயன் குளத்திலும் அத்திக்கடவு நீர் நிரப்பப்படுகிறது. இதற்கான, கட்டமைப்பு இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழாய் வழியாக திறந்துவிடப்படும் நீர், குளத்தை சென்றடைவதற்கு ஏதுவான வடிகால் கட்டமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், பல நாட்களாக, அத்திக்கடவு நீர், நஞ்சராயன் குளத்துக்கு வருவதில்லை எனக்கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் புதர்மண்டிக்கிடக்கின்றன.குடியிருப்பு பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுவதை அவ்வப்போது கண்காணித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு மக்கள் கொண்டு செல்லும் நிலையில், இதுபோன்ற பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட மக்கள் அதிகம் செல்லாத இடங்களில் உள்ள குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டப்படுகிறதா என்பதையும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என, அத்திக்கடவு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.