காந்தி நகர் - காமராஜ் நகர் மின்நுகர்வோர் கவனத்துக்கு
திருப்பூர்; காமராஜ் நகர், காந்தி நகர், மேட்டுப்பாளையம் மின்பகிர்மான பகுதி மின்நுகர்வோர், ஜூலை மாத கட்டணத்தையே செலுத்தலாம் என, மின்வாரியம் அறிவித்துள்ளது. திருப்பூர் மின்கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மின்கோட்டம், நகரம் - மேற்கு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட, காந்தி நகர், காமராஜ் நகர், மேட்டுப்பாளையம் பகிர்மான பகுதிகளில், தவிர்க்க முடியாத காரணங்களால், மின்கணக்கீடு செய்யவில்லை. காந்திநகர் பகிர்மானத்தில், ஸ்டேட் பாங்க் காலனி, பயர் சர்வீஸ் காலனி, ஏ.வி.பி., லே -அவுட் பகுதிகள்; காமராஜ் நகர் பகிர்மானத்தில், பி.என்., ரோடு, ஆறு கோம்பை வீதி பகுதிகள்; மேட்டுப்பாளையம் பகிர்மானத்தில், பிச்சம்பாளையம் இட்டேரி வீதி, 60 அடி ரோடு, மேட்டுப்பாளையம் பகுதிகளில் மின் கணக்கீடு நடக்கவில்லை. இப்பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர், கடந்த ஜூலை மாதம் செலுத்திய கட்டணத்தையே, இம்மாதமும் செலுத்தலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.