உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆஸ்திரேலிய பஞ்சுக்கு வரவேற்பு; இறக்குமதி 394  சதவீதம் அதிகரிப்பு

ஆஸ்திரேலிய பஞ்சுக்கு வரவேற்பு; இறக்குமதி 394  சதவீதம் அதிகரிப்பு

திருப்பூர்; ஆஸ்திரேலியாவில் விளைவித்த பஞ்சுக்கு வரவேற்பு கிடைப்பதால், கடந்த மாதம் மட்டும், பஞ்சு இறக்குமதி, 394 சதவீதம் அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில், இந்தியாவில் விளையும் பருத்திக்கு வரவேற்பு அதிகம். அதேபோல், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய பஞ்சுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உண்டு.கடந்த பல மாதங்களாக, சர்வதேச சந்தையின் பஞ்சு விலையை காட்டிலும், இந்தியாவில் விலை அதிகமாக உள்ளது. நுாலிழை உற்பத்தியை மேம்படுத்த, மிக நீண்ட (எக்ஸ்ட்ரா லாங்) இழை கொண்ட பருத்தி இறக்குமதிக்கு மட்டும், இந்தியாவில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற ரகங்கள் இறக்குமதி செய்ய, 11 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.பருத்தி சீசன் துவங்கிய பின், மிக நீண்ட இழை பருத்தி ஆஸ்திரேலியாவில் இருந்து, அதிகம் இறக்குமதியாகிறது. ஜவுளி உற்பத்தியாளர்கள், தரமான பஞ்சு இறக்குமதியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 2023 டிச., மாதத்தை காட்டிலும், கடந்த டிச., மாத பஞ்சு இறக்குமதி, 385 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த, 2023 டிச., மாதம், 245 கோடி ரூபாய்க்கு (29.47 மில்லியன் டாலர்) பஞ்சு இறக்குமதி நடந்தது; கடந்த மாதம் (டிச.,) மட்டும், 1,214 கோடி ரூபாய் அளவுக்கு (142.89 மில்லியன் டாலர்) பஞ்சு இறக்குமதி நடந்துள்ளது.இதேபோல், ஏப்., முதல் டிச., வரையிலான, ஒன்பது மாத ஏற்றுமதியும், 2023ம் ஆண்டு 4,118 கோடி ரூபாயாக இருந்தது, இந்தாண்டு 7,721 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் (டாஸ்மா) தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''ஆஸ்திரேலியாவில் இருந்து பஞ்சு இறக்குமதி கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது.வரி விலக்கு கிடைப்பதால், மிக நீண்ட இழை பருத்தி பஞ்சு இறக்குமதி அதிகம் நடக்கிறது. நுாற்பாலைகள் நலன்கருதி, பஞ்சு இறக்குமதி வரியில் இருந்து, தற்காலிகமாக விலக்களிக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை