உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி - மே.பாளையம் சாலை பணிகளில் குளறுபடி

அவிநாசி - மே.பாளையம் சாலை பணிகளில் குளறுபடி

திருப்பூர்: தேசிய நெடுஞ்சாலை வசமிருந்த அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை, நீண்ட முயற்சிக்கு பின், மாநில நெடுஞ்சாலை வசம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் 38 கி.மீ., துார சாலையை, 250 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில், அவிநாசி நெடுஞ்சாலை உட்கோட்டத்துக்குட்பட்ட, ஆட்டையம்பாளையம் துவங்கி, நரியம்பள்ளி வரை, 81 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு மற்றும் மரங்கள் அகற்றப்பட்டன.இருப்பினும், பணியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏற்கனவே சாலையில் போடப்பட்டுள்ள தார் முற்றிலும் பெயர்த்து எடுத்து விட்டு தான், புதிதாக தார் ஊற்ற வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால், சாலையை பெயரளவுக்கு சுரண்டிவிட்டு தார் போடப்படுகிறது. ஆரியக்கவுண்டம்பாளையம் பகுதியில் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வர வசதியாக, இடைவெளி விடாமல் மையத்தடுப்பு அமைக்கப்பட்டிருப்பதாக, அங்குள்ள குடியிருப்புவாசிகள் புகார் கூறினர். நேற்று முன்தினம், முற்றுகையில் ஈடுபட முயன்ற நிலையில், போலீசார் தலையி ட்டு சமாதானம் செய்து வைத்தனர். பின், நெடுஞ்சாலைத்துறையினர், புதிதாக அமைக்கப்பட்ட மையத்தடுப்பின் ஒரு பகுதியை, மக்கள் நடந்து சென்று வர வசதியாக இடித்தனர். கருவலுார் பகுதியில் சாலையின் இருபுறமும் வீடுகள், கடைகள் உள்ள நிலையில் சாலை விரிவாக்கப்பணியின் போது, சாலையோர கால்வாயும் இடிக்கப்பட்டது. இதில், ஒருபுறம் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது; ஆனால், மறுபுறம் கால்வாய் கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படாததால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகிறது. சாலை விரிவாக்கத்தால் சாலையின் மையப்பகுதிக்கு வந்துவிட்ட மின்கம்பத்தை, சாலையோரம் அப்புறப்படுத்தும் பணியும் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை; சில இடங்களில் புதிதாக போடப்பட்ட ரோடு பெயர்ந்துள்ளது எனவும், அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப்பணி விதிமுறைக்கு உட்பட்டு தரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருவலுாரில் கால்வாய் கட்டுமான பிரச்னை தொடர்பான விவகாரம், 2 ஆண்டுக்கு முந்தைய விவகாரம்; அப்போதிருந்த சாலை மட்டத்திற்கேற்ப கால்வாய் அமைத்திருந்தனர்; அப்போது ஆட்சேபனை எழவில்லை. இது, தற்போதைய பிரச்னை இல்லை. இருப்பினும், புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு அணுகுபாதையில் மையத்தடுப்பில் இடைவெளிவிடும் பிரச்னை தொடர்பாக, அந்த ஊரில் ஒரு தரப்பினர் ஓரிடத்திலும், மற்றொரு தரப்பினர், வேறிடத்திலும் இடைவெளி விட வேண்டும் என கேட்டிருந்தனர்; இக்குழப்பம் தான் இப்பிரச்னைக்கு காரணம். ஏற்கனவே உள்ள தார் பெயர்த்தெடுக்காமல் ரோடு போடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கள ஆய்வு செய்து, உண்மை நிலை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். இரு மாதம் முன் சாலைப்பணியை பார்வையிட வந்த, சென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர், சாலைப் பணியில் முழு திருப்தி தெரிவித்து, அமைச்சகத்துக்கு பரிந்துரையும் செய்துள்ளார். இருப்பினும், சாலைப்பணியில் ஏதேனும் குறைகள் எங்கள் கவனத்துக்கு வந்தால் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். - ரத்தினசாமி, திருப்பூர் கோட்ட பொறியாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !