அவிநாசி நகராட்சியானது! அரசாணை வெளியீடு
அவிநாசி: அவிநாசி சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.இது குறித்து, கடந்த 24ம் தேதி தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான அரசாணையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி,அவிநாசி மற்றும் பெருந்துறை ஆகிய ஏழு சிறப்பு நிலை பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது என அறிவிப்பை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.அவிநாசி பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம் கூறுகையில், ''அவிநாசியை நகராட்சியாக தரம் உயர்த்தியதாக அறிவிப்பை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் பேரூராட்சி இயக்குனர் மற்றும் தலைமை இடத்திலிருந்து நகராட்சியாக மாற்றம் செய்ததற்கான அறிவிப்பு வந்தவுடன் தற்போது உள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களாக மாற்றம் செய்யப்படுவர்.நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வந்தவுடன் ஆணையாளர் நியமிக்கப்படுவர். தேர்தலுக்கு பின்னரே, வார்டுகள் வரையறை நடைபெறும்,'' என்றார்.