உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி - சேவூர் ரோடு ஆக்கிரமிப்பு விவகாரம் விஸ்வரூபம்

அவிநாசி - சேவூர் ரோடு ஆக்கிரமிப்பு விவகாரம் விஸ்வரூபம்

அவிநாசி; அவிநாசி - சேவூர் ரோடு ஆக்கிரமிப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சூளை ஸ்டாப் வரை நகராட்சிக்குட்பட்ட நெடுஞ்சாலை பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலையோர கடைகள் உள்ளன. சிந்தாமணி துவங்கி புதிய பஸ் ஸ்டாண்ட் வரை பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடியும் வாகனங்களை நிறுத்த முடியாத படியும் தள்ளுவண்டிகள் ஆக்கிரமித்துள்ளன. கடந்த 21ம் தேதி அவிநாசி, சேவூர் ரோட்டில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போடப்பட்டுள்ள காய்கறி கடை உரிமையாளர் தனது கடைகளுக்கு சரக்கு இறக்குவதற்காக ரோட்டிலேயே வேனை நிறுத்தி உள்ளார். வேனின் கதவை திடீரென திறந்ததால் டூவீலரில் வந்த முதியவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆக்கிரமிப்புகள் காரணமாக கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட விபத்துகளில் பலர் கை, கால்கள் மற்றும் உறுப்புகளை இழந்துள்ளனர். சாலையோர கடைகள், போர்டுகள், பந்தல்கள் என பாரபட்சம் இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் தர வேண்டும் என பல்வேறு சமூக நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிடில், வரும் 29ம் தேதி சமூக அமைப்பினர், சங்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவிநாசி அனைத்து வணிகர் சங்கம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர், எஸ்.பி., அவிநாசி டி.எஸ்.பி., அவிநாசி தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கும் பதிவு தபால் அனுப்பப்பட்டது.---நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளரிடம் மனு அளித்த அவிநாசி அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள்.

உயிருடன் விளையாடும் நெடுஞ்சாலைத்துறை

நேற்று நடந்த அவிநாசி பேரூராட்சி கூட்டத்திலும் ஆக்கிரமிப்பு விவகாரம் எதிரொலித்தது.கவுன்சிலர்கள் பேசியதாவது:திருமுருகநாதன்(தி.மு.க.,): அவிநாசி, சேவூர் ரோட்டில் பண்ணாரி அம்மன் கோவில் அருகே வேகத்தடை அமைக்கவும், ரவுண்டானாவின் அளவை குறுகியதாக மாற்றம் செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம் பலமுறை நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் அனுப்பியும் கூட பொதுமக்களின் உயிருடன் விளையாடும் விதமாக நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக உள்ளனர்.சித்ரா (அ.தி.மு.க.,):சேவூர் ரோட்டில் போக்குவரத்து நிறைந்த இடத்தில் உள்ள காய்கறி கடைகளை அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள தினசரி மார்க்கெட்டுக்கு மாற்றம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தங்கவேலு (தி.மு.க.,): அவிநாசியில் துறை சார்ந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்யவில்லை. நெடுஞ்சாலைத் துறையினரின் மெத்தனப் போக்கை கண்டித்து பேரூராட்சி நிர்வாகம் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்ப வேண்டும்.

அவிநாசி பேரூராட்சி, சேவூர் ரோட்டில் சூளை முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரையிலும், பல்லடம் ரோட்டில் இருந்து புளியம்பட்டி ரோடு வரையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நெடுஞ்சாலைத்துறை எல்லைக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மே 2ம் தேதிக்குள் அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட கால அவகாசம் அளித்து நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியம் செய்தால், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்; ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது கையகப்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் திருப்பித்தர மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !