உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேரிடர் காலத்தில் அச்சம் தவிர்; துணிந்து நில்!

பேரிடர் காலத்தில் அச்சம் தவிர்; துணிந்து நில்!

திருப்பூர்: 'வெள்ளப்பெருக்கு, தீ விபத்து போன்ற பேரிடர்களின்போது பயப்படக்கூடாது; துணிச்சலுடன் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும்,' என, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் பேசினார். பேரிடர் அபாய குறைப்பு தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலெக்டர் மனிஷ் நாரணவரே , தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் உள்பட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

தீயணைப்பு வீரர்கள் தத்ரூப செயல்விளக்கம்

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு வீரர்கள், உயரமான இடங்களில் சிக்கிய தீ விபத்து உள்ளிட்ட பேரிடரில் சிக்கிய நபர்களை, கயிறு கட்டி மீட்பது; கயிறு இல்லாதபோது, தார்ப்பாய் பயன்படுத்தி மீட்பது; காயமடைந்து ரத்தம் வெளியேறும் நிலையில் உள்ளவர்களை துாக்கிச் செல்லும் வழிமுறைகள்; உடலில் தீப்பிடித்த நபர் மீது, தண்ணீர் நனைத்த பெட்ஷீட் போர்த்தி, தரையில் உருளச்செய்து அணைப்பது குறித்து தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

மீட்புக்கருவியாக மாறும் தெர்மோகோல், குடங்கள்

தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் பேசியதாவது: திடீரென வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது, நீச்சல் தெரியும் என்பதற்காக நாம் நம்மை மட்டும் காப்பாற்றிக்கொண்டால் மட்டும்போதாது; சார்ந்துள்ள நமது உறவினர்கள், நண்பர்களையும் மீட்கவேண்டும். தகவல் கிடைத்து தீயணைப்புத்துறை வரும் வரை காத்திருக்க கூடாது; பேரிடர் காலங்களில், பல்வேறு காரணங்களால், பாதித்த இடத்தை தீயணைப்பு துறையினர் வந்தடைவதில் தாமதங்கள் ஏற்படலாம். எந்த சூழலிலும் பயப்படக்கூடாது; பலம் மிக்கவர்களால்தான், எத்தகைய பேரிடர்களையும் எதிர்கொள்ளமுடியும். வீட்டிலுள்ள தண்ணீர் கேன், தெர்மாகோல், காலி குடங்களையே மீட்பு கருவிகளாக மாற்றி, மீட்பு பணிகளை மேற்கொள்ளமுடியும். இவ்வாறு, அவர் பேசினார். திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறை சார்பில், குமரன் ரோட்டிலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ---

சிலிண்டரில் தீப்பிடித்தால் அச்சம் வேண்டாம்

காஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தால், தீ சிலிண்டருக்குள் சென்று வெடித்துச்சிதறிவிடும் என பயந்து, வீட்டிலிருந்து வெளியேறே ஓடக்கூடாது. இதனால், தீ மற்ற பொருட்களிலும் பரவி, விபத்து தன்மை அதிகரித்துவிடும். சிலிண்டரில் தீ பிடித்தால் பயப்படத்தேவையில்லை. 'ரெகுலேட்டரை' ஆப் செய்தாலே, தீ அணைந்துவிடும். ஒருவேளை, ரெகுலேட்டரிலும் தீப்பிடித்து எரிந்தால், போர்வையை தண்ணீரில் நனைத்து, சிலிண்டரை முழுமையாக சுற்றவேண்டும்; இதனால், ஆக்ஸிஜன் தடுக்கப்பட்டு, தீ அணைந்துவிடும். சாதாரண காற்றைவிட, சிலிண்டரிலுள்ள கேஸ், 40 மடங்கு அதிக எடை கொண்டது. ஆகவே இந்த கேஸ், தரையில்தான் பரவும். சிலர், அடுப்பில் சாதத்தை வைத்துக்கொண்டு, மொபைல்போன் பேசுவது, வேறு வேலைகளில் ஈடுபடுவர். சாதம் பொங்கி அடுப்பு அணைந்திருக்கும். அதிலிருந்து காஸ் வெளியேறி தரை முழுவதும் பரவியிருக்கும். இதை அறியாமல், மீண்டும் வந்து அடுப்பை பற்றவைக்கும்போது, உடலில் தீப்பிடித்துவிடும். உடலில் தீப்பிடித்தால் பதறியடித்து, வெளியே ஓடக்கூடாது; இதனால், தீ மேலும் அதிகரிக்கும். தரையில் படுத்து உருண்டு, தீயை அணைக்கவேண்டும்; மீட்புக்காக வருபவர், விபத்தில் சிக்கியவரின் உடலில் ஈரமான போர்வையை சுற்றி, தரையில் உருளச்செய்து காப்பாற்றலாம். - வீரராஜ், உதவி மாவட்ட அலுவலர், தீயணைப்புத்துறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை