தொழிலாளர் நல வாரிய கல்வி உதவி மொபைல் போனில் விழிப்புணர்வு
திருப்பூர் : தொழிலாளர் நல வாரியம் வாயிலாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, பென்ஷன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறுவது குறித்து, தொழிலாளர் நல வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற தன்னார்வ அமைப்பினர், பொதுமக்களின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.தமிழகத்திலுள்ள நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமணம், மகப்பேறு உதவித் தொகை, விபத்து ஊன நிவாரணம், வீடு கட்ட உதவித்தொகை, ஈமச்சடங்கு, இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பண பலன்கள் வழங்கப்படுகின்றன.தற்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கான மேற்படிப்பை தேர்வு செய்ய துவங்கியுள்ளனர்.பொதுமக்களின் மொபைல் போனுக்கு தொடர்பு கொள்ளும், தொழிலாளர் நல வாரிய அங்கீகாரம் பெற்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள், நல வரியத்தில் உறுப்பினராக இணை வதால், கிடைக்கும் கல்வி, திருமண உதவித் தொகை உள்ளிட்ட சேவைகள் குறித்து விளக்குகின்றனர்.அவற்றை பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரங்களையும் தெரிவிக்கின்றனர். தொழில் சார்ந்த நல வாரியத்தில் உறுப்பினராக இணைந்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். இது, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.