பக்கவாதம் தடுக்க விழிப்புணர்வு
திருப்பூர்: திருப்பூர், சபாபதிபுரம், டி.எம்.எப்., மருத்துவமனையில் 'பக்கவாதம்' தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது. நரம்பியல் மருத்துவர் டாக்டர் ரம்யா கூறியதாவது:பக்கவாதம் என்பது மூளையின் ரத்தக்குழாய்களில் திடீர் அடைப்பு ஏற்படுவதால், மூளைக்கு ரத்தம் தடைபடுதல் அல்லது ரத்தக்குழாய் வெடிப்பால் மூளைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஒரு பகுதி அல்லது முழுமையாக ஏற்படும் மூளைச் செயல் இழப்பு ஆகும்.உலகளவிலான உயிரிழப்புகளில் மாரடைப்புக்கு அடுத்து இரண்டாவது காரணியாக பக்கவாதம் உள்ளது. பக்கவாதம் நம் நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஏனெனில், மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் நிரந்தர இயலாமையுடன் வாழ்கின்றனர்; நேரடி, மறைமுகச் செலவினம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது; நோயாளியின் குடும்பத்தினருக்கு பணம் மற்றும் உழைப்புச்சுமை அதிகரிக்கிறது.முக்கிய காரணங்கள்: பக்கவாதம் ஏற்பட உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய்கள், புகைப்பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், போதிய உடற்பயிற்சியின்மை ஆகியன முக்கியக் காரணங்கள்.என்ன செய்வது?: ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் இருப்பின் மருத்துவர் அறிவுரை கொண்டு அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மது, புகை, ஹான்ஸ் போன்ற தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளுதல், சரியான அளவு உறக்கம், போதிய உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.சிகிச்சை முறை: ஒருவேளை நமக்கோ, நம் அருகில் இருப்பவருக்கோ இந்த அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்.மூளையில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அறிகுறி ஏற்பட்டு மூன்று முதல் நான்கரை மணி நேரத்திற்குள்ளாக மருத்துவமனையை அணுகினால் ரத்த நாள அடைப்பை நீக்கும் மருந்துகளை செலுத்துவதன் மூலம் ஒருவர் பரிபூரண குணம் அடைய முடியும்.