திருப்பூர்: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கழிவுகள் திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப்பிரிவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த, 9 மற்றும், 10ம் தேதி வீடு, பனியன் நிறுவனங்களை சுத்தம் செய்த போது, அவற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பை, பல பகுதிகளில் தொட்டிகளில் நிறைந்தது.வழக்கமாக வீட்டு கழிவு, ஓட்டல் கழிவுகளுடன் இவையும் சேர்ந்த நிலையில், குப்பை அளவு, 11ம் தேதியே, 800 டன்னாக அதிகரித்தது. இவற்றை இருமுறை அகற்று முன்பாக, நேற்று காலை குப்பை அளவு அதிகரித்தது. ஆயுத பூஜை விற்பனையை எதிர்பார்த்து விற்பனைக்கு வாழைமரம், மாவிலை, பூக்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இரவு வரை விற்பனையாகாத பொருட்களை அங்காங்கே அப்படியே வியாபாரிகள் விட்டுச் சென்றனர்.இதனால், முக்கிய சந்திப்புகளில் ஆயுதபூஜை கழிவுகள் அப்படியே தேங்கியுள்ளது. இதனால், மாநகராட்சி அகற்ற வேண்டிய குப்பை அளவு, ஆயிரம் டன்னை எட்டி பிடித்துள்ளது. பூ மார்க்கெட் பின், 100 மீ., துாரத்துக்கு, ஒரு டன்னுக்கு மேல் குப்பை குவிந்து கிடக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், குப்பைகள் நனைந்து துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ஆயுதபூஜை முடிந்து இரண்டு நாட்களும் குப்பை எடுக்கும் ஊழியருக்கு சிறப்பு பணி வழங்கப்படும். நேற்றே நான்கு மண்டலத்திலும், அதிக குப்பை தேங்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, டிராக்டர், லாரிகள் மூலம் குப்பை அகற்றும் பணி துவங்கப்பட்டு விட்டது. இன்று (ஞாயிறு) விடுமுறை. தேங்கியுள்ள குப்பைகள் இரண்டு நாட்களுக்கும் முழுமையாக அகற்றப்பட்டு விடும்,' என்றனர்.