உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எட்டு நாளில் தீர்ந்த பேக்டர் - 8 மருந்து: ஹீமோபிலியா நோயாளிகள் வேதனை

எட்டு நாளில் தீர்ந்த பேக்டர் - 8 மருந்து: ஹீமோபிலியா நோயாளிகள் வேதனை

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 'ஹீமோபிலியா' நோயாளிகளுக்கு தேவையான உயிர்காக்கும் 'பேக்டர் - 8' மருந்து இருப்பு வைப்பதில்லை. எந்நேரமும் இக்குறைபாடு உடையவர் உயிர் பயத்துடன் வாழ வேண்டியுள்ளது என அக்குறைபாடு உடையவர்கள் புலம்புகின்றனர்.மரபணு குறைபாடுகளில் ஒன்று, ஹீமோபிலியா. இக்குறைபாடு உள்ளவர்களுக்கு, ரத்தம் உறையும் தன்மை இருக்காது; காயம்படும் போதோ அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், ரத்தம் தொடர்ந்து வெளியேறும்; உடேன, உரிய சிகிச்சை பெற விட்டால், உயிருக்கே ஆபத்தாகி விடும்.இக்குறைபாட்டுடன் திருப்பூர் மாவட்டத்தில், 70க்கும் அதிகமானோர் உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவப்பிரிவு, திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் துவங்கினாலும், பேக்டர் 8 தடுப்பூசி தேவையான அளவில் இருப்பு வைப்பதில்லை.

தற்காலிக ஆறுதல்

'பேக்டர் 8' தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் போது கோவை, வேலுாரில் இருந்து தற்காலிகமாக வாங்கி, நோயாளிகளுக்கு தடுப்பூசியாக செலுத்தி வந்தனர். பற்றாக்குறை இருப்பதாக, ஹீமோபிலியா குறைபாடு உடையவர்கள் கலெக்டர் கிறிஸ்துராஜ், மருத்துவக் கல்லுாரி முதல்வர் முருகேசனிடம் மனு அளித்தனர்.நிலைமையை சமாளிக்க சென்னையில் இருந்து, 15 நாட்களுக்கு தேவையான 'பேக்டர் 8' தடுப்பூசி, அக்., மூன்றாவது வாரத்தில் பெறப்பட்டது. நோயாளிகள் தற்காலிக ஆறுதல் அடைந்தனர். நவ., முதல் வாரம் வரை வரும் என எதிர்பார்க்கப்பட்ட இம்மருந்து, தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முடிந்து விட்டது.ஹீமோபிலியா பாதிக்கப்பட்டோர் கூறுகையில், '15 நாளைக்கு வருமென எதிர்பார்த்த மருந்து, எட்டு நாளில் முடிந்து விட்டது. ஒரு வாரத்துக்கு மேலாகியும் தடுப்பூசி வந்து சேரவில்லை. குறைபாடு உடையவர்கள் சிலர், கை, கால் வலியால் தினமும் சிரமப்படுகிறோம். திருப்பூரில், 50க்கும் அதிகமானோருக்கு இத்தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இதனால், வேறு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு விடுமோ என பயத்தில் உள்ளோம். எனவே, தாமதமின்றி, 'பேக்டர் - 8' தடுப்பூசியை தமிழக அரசு வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை