உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முன்னுரிமை கடன்களுக்கு வங்கிகள் முக்கியத்துவம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 96.7  சதவீதம் வழங்கல்

முன்னுரிமை கடன்களுக்கு வங்கிகள் முக்கியத்துவம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 96.7  சதவீதம் வழங்கல்

திருப்பூர், ; திருப்பூர் மாவட்ட வங்கிகள், கடந்த 2024 - 25ம் ஆண்டு நிதியாண்டில், 38,680 கோடி ரூபாய்க்கு முன்னுரிமை கடன் வழங்கியுள்ளன; நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 96.7சதவீத கடன் வழங்கப்பட்டுள்ளது.புதிய தொழில் துவங்க, தொழில் விரிவாக்கம், வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்வி, வேளாண்மை என எல்லாவற்றுக்கும் தேவையான நிதியை வழங்கும் முக்கியமான ஆதாரமாக வங்கி கடன் உள்ளது. வங்கிகள் கடன் வழங்க ஏதுவாக, அந்தந்த மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், கடன் இலக்கு நிர்ணயித்து கொடுக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி (கனரா), ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கப்பட வேண்டிய முன்னுரிமை கடன் இலக்கை நிர்ணயிக்கிறது.அவ்வகையில், கடந்த 2024 - 25ம் ஆண்டு நிதியாண்டில், ரூ.38,680 கோடிக்கு முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள 350 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகள், கடன் வழங்கியுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில், 96.7 சதவீதம் அதாவது, மொத்தம் 37,401.35 கோடி ரூபாய் முன்னுரிமை கடன் வழங்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக, குறு, சிறு தொழில்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 99.87 சதவீதம் அதாவது, 21,317 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு, 15,674.08 கோடி, வீட்டு கடன், 167.82 கோடி, கல்விக்கடன், 45.44 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுர முன்னுரிமை கடன்கள், 197.62 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.நடப்பு (2025 - 26) நிதியாண்டில், 45,433 கோடி ரூபாய் முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இலக்கு, முந்தைய நிதியாண்டைவிட 17.45 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில், 58.18 கோடி ரூபாய் கல்விக்கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது; ஆனால், 45.44 கோடி ரூபாயாக, இலக்கில் 78.10 சதவீதம் மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில் வங்கிகள், கல்வி கடன் வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து, உடனடியாக கடன் வழங்கவேண்டும் என்பது பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !