| ADDED : நவ 19, 2025 04:48 AM
அனுப்பர்பாளையம்: சிறுபூலுவபட்டி ரிங் ரோட்டில், குவிக்கப்பட்டுள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி, மறியல் செய்த பனியன் தொழிலாளர்களை போலீசார் கைது செய்யும் போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட இடமின்றி மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் வார்டு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை துாய்மை பணியாளர்கள் ஆங்காங்கே உள்ள காலி இடங்களில் தேக்கி வருகின்றனர். அவ்வகையில், 25வது வார்டு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை சிறுபூலுவப்பட்டி ரிங்ரோடு வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள காலி இடத்தில் கொட்டி வருகின்றனர். மலைபோல் தேங்கி உள்ள குப்பையால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில், குப்பை தேக்கி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு எதிரில் பல பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் குப்பை துர்நாற்றத்தால் பணியாற்ற முடியவில்லை. எனவே, குப்பை கொட்ட கூடாது, என குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து வார்டு கவுன்சிலர் தங்கராஜ், தலைமையில் நேற்று காலை பெண்கள் உள்பட, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரிங் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் நிறுவனத்தில் பணியாற்றிய வட மாநில தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த, 15 வேலம்பாளையம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட, 46 பெண்கள் உள்பட நுாறு பேரை கைது செய்தனர்.