பி.ஏ.பி., கால்வாயில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் கொடுங்க! மழைக்காலத்திலும் வரத்து இல்லாமல் வறட்சி
உடுமலை; மழைக்காலத்திலும் நீர் வரத்து இல்லாமல், பாதித்துள்ள உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., கால்வாய் வாயிலாக தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.தாராபுரம் தாலுகா கெத்தல்ரேவ் பகுதியில் உப்பாறு அணை அமைந்துள்ளது. பி.ஏ.பி., பாசன திட்டத்தில், இரு மண்டலங்கள் மட்டும் பாசன வசதி பெற்ற போது, உப்பாறு அணைக்கு நிலையான நீர் வரத்து கிடைத்து வந்தது.பி.ஏ.பி., திட்டம் நான்கு மண்டலமாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு, உப்பாறு அணைக்கு நீர் வரத்து முற்றிலுமாக பாதித்தது.இதனால், அணையின் வாயிலாக, நேரடி பாசனம் பெறும், 6 ஆயிரம் ஏக்கரிலும், சுற்றுப்பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, பல ஆயிரம் ஏக்கரிலும் விவசாயத்தை கைவிடும் சூழல் உருவானது.உயிர் தண்ணீர் அடிப்படையில், பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரிக்கைகள் வலுத்தது.இதையடுத்து, குடிநீர் மற்றும் உயிர் தண்ணீர் அடிப்படையில், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து அரசூர் ஷட்டர், உப்பாறு ஓடை வழியாக அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்கான அரசாணையும் பெறப்படுகிறது.ஆனால், போதிய பராமரிப்பில்லாத ஓடை, வரிசையாக தடுப்பணைகள் உள்ளிட்ட காரணங்களால், பிரதான கால்வாயில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அணைக்கு முழுமையாக சென்று சேர்வதில்லை. கடந்த மாதம், உப்பாறு அணைக்கு, பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், அணையின் நீர்மட்டம் போதியளவு உயரவில்லை.நேற்று காலை நிலவரப்படி, உப்பாறு அணையின் நீர் மட்டம், மொத்தமுள்ள 24 அடியில், 12.70 அடி மட்டுமே நீர் இருந்தது. அணைக்கு, நீர்வரத்து முற்றிலுமாக இல்லை. ஆய்வு செய்யுங்க
இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: மழைக்காலத்திலும், நீர்வரத்து இல்லாமல் காணப்படும் உப்பாறு அணையின் நிலையால், பல ஆயிரம் ஏக்கரில், விவசாயம் பாதித்துள்ளது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆயக்கட்டு பகுதிகளில், மழை பெய்து வருவதால், விளைநிலங்களுக்கு தண்ணீர் தேவை குறைவாக உள்ளது.இந்த தருணத்தில், பி.ஏ.பி., பிரதான கால்வாயில் இருந்து அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கலாம். இதனால், உப்பாறு ஓடை வழியோர கிராமங்களும் பயன்பெறும்.மேலும், அமராவதி ஆற்றில், மழைக்காலங்களில், வெளியேற்றப்படும் உபரி நீரை உப்பாறு அணைக்கு வழங்குவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வாயிலாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர். அணை நீர்மட்டம்
திருமூர்த்தி அணைப்பகுதியிலும், நீர்ப்பிடிப்பு பகுதியிலும், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அணையின் நீர் மட்டம், 60 அடிக்கு, 52.77 அடியாக உயர்ந்துள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்கா, பாலாறு படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது. எனவே, பிரதான கால்வாய் வாயிலாக உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கினால், அணை பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், மழைக்காலத்தில் கிடைக்கும் நீரும் வீணாவது தவிர்க்கப்படும் என உப்பாறு படுகை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.