உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு விவகாரம்! கலெக்டர் முன்னிலையில் விவசாயிகள் வாக்குவாதம்

பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு விவகாரம்! கலெக்டர் முன்னிலையில் விவசாயிகள் வாக்குவாதம்

-- நமது நிருபர் -திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பி.ஏ.பி., தண்ணீர் திருட்டு தொடர்பாக விவசாயி ஒருவர் பேசியது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால், விவசாயிகளுக்கும் - பி.ஏ.பி., பாசனசபை உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து பேசுகையில், ''பி.ஏ.பி., தொகுப்பணைகள் நிரம்பி, உபரி நீர் வெளியேறும் நிலையில் உள்ளது. ஆகவே, தாராபுரம் உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி.,ல் பத்து நாட்களுக்கு உயிர் நீர் வழங்க வேண்டும். கடந்தாண்டு வட்டமலைக்கரை அணைக்கு பத்து நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது; உப்பாறு அணைக்கு, 5 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. உபரியாகும் காலங்களில், வீணாகும் தண்ணீரை, வறட்சி நிலையிலுள்ள உப்பாறு அணைக்கு திறக்க வேண்டும்,'' என்றார். பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அதிகாரி, 'பி.ஏ.பி., திட்டக்குழு கூட்டம், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்பட்டது. இதில், பி.ஏ.பி., பாசன பகுதிகளுக்கு இரண்டு தண்ணீர் வழங்கிவிட்டு, மழையை பொருத்தும், அணையின் நீர் இருப்பை பொருத்தும், உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டது,' என்றார். அப்போது, குறுக்கிட்ட விவசாயி சிவகுமார் பேசுகையில், ''பி.ஏ.பி.,ல் நடைபெறும் முறைகேடுகளை தடுத்தால் மட்டுமே, உப்பாறு அணைக்கு தண்ணீர் கிடைக்கும். பாசன காலத்தில், தண்ணீர் திறக்கும்போது, பிரதான கால்வாயை ஒட்டியுள்ள மின் இணைப்புகளை தற்காலிகமாக துண்டிக்கவேண்டும். இதுகுறித்து கலெக்டர் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், அதன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு மடையிலும், இரண்டு மடங்கு அதிக தண்ணீர் எடுக்கப்படுகிறது. விவசாயிகளையும், விவசாய சங்கங்களையும் ஆலோசித்து, வெளிப்படையான நீர் நீர்வாகம் செய்வதாக, பி.ஏ.பி., திட்டக்குழுவினர் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். திட்டக்குழுவினர், கலெக்டரின் உத்தரவு, அரசாணை, நீதிமன்ற உத்தரவு எதையும் மதிப்பதில்லை. அது திட்டக்குழு அல்ல, திருட்டுக்குழு,'' என்றார். அதற்கு பி.ஏ.பி., திட்டக்குழு உறுப்பினர் ஈஸ்வரன், ''யாரய்யா சொல்கிறாய். விவசாயி என்கிற போர்வையில், ரவுடித்தனம் செய்கிறாயா. நாலு லட்சம் ஏக்கர் பாசன பரப்பு விவசாயிகளின் பிரதிநிதிகள் நாங்க,'' என்று ஆவேசமாக பேசினார். இதனால், திட்டக்குழு உறுப்பினர்கள் - விவசாயிகளிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும், ஒருவரை ஒருவர் மாறிமாறி வசைபாடியதால், 15 நிமிடங்கள் வரை கூட்ட அரங்கத்தில் அமளி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்திய கலெக்டர் மனிஷ் நாரணவரே, ''பி.ஏ.பி., சார்ந்த பிரச்னைகள் தொடர்பாக பேசி தீர்வு காண, விரைவில் சிறப்பு கூட்டம் நடத்தப்படும்,'' என அறிவித்தார். இதனால், சலசலப்பு அடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை